×

நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்த திட்டம்

நாமக்கல், மார்ச் 15: நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்த, 12 ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1.19 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகராட்சியாக இருந்தது. கடந்த 2011ம் ஆண்டு நாமக்கல் நகராட்சியுடன், கொசவம்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, நல்லிபாளையம், சிலுவம்பட்டி, அய்யம்பாளையம், முதலைப்பட்டி, சின்ன முதலைப்பட்டி உள்ளிட்ட 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டது. இதன் காரணமாக நகரின் வளர்ச்சி அதிகரித்தது. தற்போது, நாமக்கல் நகராட்சியில் உள்ள 55 ஆயிரம் குடியிருப்புகளில் 2.15 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியின் பரப்பரளவு 55.24 சதுர கி.மீட்டராக விரிந்துள்ளது. நகராட்சியின் ஆண்டு வருமானம் ரூ.45 கோடியாகும். நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த, அனைத்து தகுதிகளும் உள்ளது.

வளர்ந்து வரும் நகரமாக இருப்பதால், நாமக்கல்லை மாநகராட்சியாக்க கோரி கடந்த மாதம் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரிங்ரோடு அமைக்க வேண்டும் என்பது நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது, நகரை சுற்றி ரிங்ரோடு அமைக்கும் பணிக்கான முன்னேற்பாடு துவங்கியுள்ளது. முதலைப்பட்டியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ., தொலைவில் ரிங்ரோடு அமைகிறது. எனவே, பேருந்து நிலைய பணிகள் முடிவடையும் முன்பு ரிங் ரோடு பணிகள் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ரிங் ரோடு அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. 80 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ரிங் ரோடு அமையும் ஊராட்சிகளை, நகராட்சியுடன் இணைப்பதன் மூலம் ஒருங்கிணைந்த உள்ளாட்சியாக மேம்படுத்தப்படும் என நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், மரூர்பட்டி, பாப்பிநாய்க்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய 12 ஊராட்சிகளை நாமக்கல் நகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதன் மூலம், அரசு மானியங்கள் அதிக அளவில் பெறப்பட்டு நகரம் வளர்ச்சி அடையும். ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களுக்க தேவையான அடிப்படை வசதிகள் மேம்படும்.

இதுகுறித்து கடந்த வாரம் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, 12 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்போதைய பதவி காலம் முடிந்த உடன், நாமக்கல் நகராட்சியுடன் ஒன்றிணைத்து நாமக்கல் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த திருத்திய கருத்துரு  அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 12 ஊராட்சிகளில் தற்போதைய கணக்கெடுப்பின்படி 90 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இந்த ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதன் மூலம், நகராட்சியின் மக்கள் தொகை 3 லட்சமாக உயரும். தமிழக அரசின் அறிவிப்புபடி 3 லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதிகள், மாநகராட்சியாக இருந்து வருகிறது. நாமக்கல் நகராட்சியில் தற்போதைய மக்கள் தொகை 2.15 லட்சம் ஆகும்.

Tags : Namakkal ,Municipal Corporation ,
× RELATED கள்ளச்சாராயம் குறித்து தகவல் அளிக்க வாட்ஸ் அப் எண்