×

பட்டாம்பி அருகே வயல் தண்ணீரில் ரேக்ளா பந்தய போட்டி விறுவிறுப்பு: 10 வயது சிறுவனுக்கு ‘பண மாலை’ பரிசு

பாலக்காடு:  பட்டாம்பி அருகே வயல் தண்ணீரில் விறுவிறுப்பாக நடந்த ரேக்ளா பந்தய போட்டியில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 10 வயது சிறுவனுக்கு ‘பண மாலை’ பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது.  கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி அருகே உள்ள கப்பூரில் தண்ணீரில் ரேக்ளா பந்தயப்போட்டி நடந்தது. இப்போட்டியில் 70 ஜோடி காளைகளுடன் வீரர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். பொதுவாக, பாலக்காடு மாவட்டத்தில் விவசாயிகள் வயற்காடுகளில் அறுவடை முடித்த சமயத்தில், தண்ணீரில் ரேக்ளா பந்தய போட்டிகள் ஆண்டு தோறும் நடத்துவது வழக்கம்.  அதுபோக, இந்தாண்டும் பாலக்காடு மாவட்டம் ஆனக்கரையை அடுத்த கப்பூரில் கேபிஎம் சகோதரர்கள் தலைமையில் தண்ணீரில் ரேக்ளா பந்தய போட்டி விறுவிறுப்பாகவும், உற்சாகமாகவும் நடைபெற்றது. இப்போட்டியில் பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

முடிவில், முதல் இடங்களை சக்கீரின் காளைகள் வென்று அனைவரது பாராட்டுகளை பெற்றது. முன்னதாக, போட்டிகளை எம்எல்ஏ மம்மிக்குட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வயற்காட்டு வரப்புகளில் திரண்டு நின்று, போட்டிகளை கண்டு ரசித்தனர். பார்வையாளர்கள் அனைவருக்கும் ரேக்ளா போட்டி குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.  மேலும் ரேக்ளா போட்டிகளை பார்க்க பாலக்காடு, மலப்புரம், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், ரேக்ளா ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கூடினர். இதனால் அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது. ரேக்ளா களத்தில் பூர்வீக விவசாயியான ஹசன் - ரஜீனா தம்பதியினர் மகன் ஆதில்மோன் என்னும் 10 வயது சிறுவன், ஜாக்கியாக காளைகளை விரட்டியோட்டியது பார்வையாளர்களை பெரிதும் பரவசப்படுத்தியது. இதையடுத்து பார்வையாளர்கள் சார்பில் இதற்கு பாராட்டு தெரிவித்து, சிறுவன் ஆதில்மோனுக்கு ‘பணமாலை’ அணிவித்து கெளரவிக்கப்பட்டது.

Tags : Rakla ,Pattambi ,
× RELATED பழைய அரசாணைப்படி ரேக்ளா ரேஸ்: ஐகோர்ட் அனுமதி