அலகுமலையில் விரைவில் ஜல்லிக்கட்டு போட்டி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அலகுமலை காளைகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகையை ஒட்டி  அலகுமலை மலை அடிவாரத்தில் ஜனவரி 29ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  கடந்த டிசம்பர் மாதத்திலேயே ஜல்லிக்கட்டு வாடிவாசல், கேலரி அமைப்பதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது. ஆனால், ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடம் குறித்து அலகுமலை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் தூயமணி தலைமையில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இதனால், பிப்ரவரி 19ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதாக கூறி தள்ளி வைக்கப்பட்டது. ஆனாலும், ஜல்லிக்கட்டு நடத்தும் இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடிந்து வந்ததால், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

இதற்கிடையே, தற்போது பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு காணப்பட்டு, போட்டியை நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதனால், விரைவில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் தேதி வெளியாக வாய்ப்புள்ளது. இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளைகள் பாதுகாப்பு சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியை அலகுமலையில் நடத்தக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்தது. இதனால், கால தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் அதிகாரிகள் அலகுமலையில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு இடத்தை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். இதனால், ஆலோசனைக்கு பின்னர் இடம் உறுதி செய்யப்படும். தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான தேதியும் விரைவில் வெளியாகும் வாய்ப்புள்ளது. இதனால், தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: