×

ரூ.175 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மையம்

தர்மபுரி, மார்ச் 8: தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.175 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி அமைப்பதற்காக திட்ட முன்மொழிவு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டீன் தெரிவித்தார். தர்மபுரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கடந்த 2008ம் ஆண்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக ரூ.100 கோடி மதிப்பில் 816 படுக்கைகள் கொண்ட 5 மாடி கட்டிடத்துடன் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, 1230 உள்நோயாளிகளுக்கு படுக்கைகள் உள்ளன. இங்கு, 16 அறுவை சிகிச்சை அரங்குகள், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி, டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை, கண், மகப்பேறு, பல், இருதயம், நுரையீரல் என 27 துறைகள் உள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு முதல் கண் வங்கியும் துவங்கப்பட்டுள்ளது. தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில், அதிநுட்பமான இருதயம், நரம்பு, சிறுநீரகம் போன்ற சிகிச்சைகளுக்கு வருவோரை சேலம், சென்னை போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கும் நிலை காணப்படுகிறது. இதனால், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதியை ஏற்படுத்தி அனைத்து விதமான அதிதீவிர சிகிச்சைகளும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தில் டாக்டர்கள் பேசும்போது, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.175 கோடிக்கான திட்ட முன்மொழிவு அரசுக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அமுதவள்ளி கூறியதாவது:

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலத்தின் ஒரு பகுதி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் என 5 மாவட்ட மக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். இங்கு, ரூ.175 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி அமைக்கப்பட உள்ளது. இந்த மருத்துவமனைக்காக ஏற்கனவே நீண்டகாலமாக செயல்பட்டு வரும் சுமார் 6 ஆயிரம் சதுர மீட்டர் கொண்ட பழைய மருத்துவமனை கட்டிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், நரம்பியல் அறுவை சிகிச்சை, இருதயவியல், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை, வாஸ்குலர் சர்ஜரி, சிறுநீரகவியல், பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை, மெடிக்கல் கேஸ்ட்ரோ என்ட்ராலஜி, தொராசிக் மெடிசன் ஆகிய துறை நோய்களுக்கு உள்நோயாளிகளாக சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் வேறு மருத்துவமனைக்கு நோயாளியை பரிந்துரைக்க வேண்டிய அவசியம் இருக்காது. இவ்வாறு டீன் அமுதவள்ளி கூறினார். அப்போது, மருத்துவக்கண்காணிப்பாளர் சிவகுமார், ஆர்எம்ஓ காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Super Specialty Center ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா