பொன்னை அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி பிரம்மோற்சவ 3ம் நாள் தேரோட்டம் விடுமுறை தினத்தில் திரண்ட பக்தர்கள்

பொன்னை, மார்ச் 5: பொன்னை அடுத்த வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் சுவாமியை வழிபட்டனர். வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 24ம் தேதி பிரம்மோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு வாகனங்களில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்தனர். இதனையடுத்து கடந்த 2ம் தேதி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து அன்று மாலை வள்ளிமலையை சுற்றி 4 நாள் தேரோட்டம் தொடங்கியது. முத் நாள் சின்ன கீசகுப்பம் துண்டுக்கரை பகுதியிலும், 2ம் நாள் சோமநாதபுரம் பகுதியிலும் தேர் நிறுத்தப்பட்டு பல்வேறு விசேஷ பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

3ம் நாளான நேற்று காலை 10 மணி அளவில் திருத்தேர் புறப்பட்டு மாலை பெருமாள்குப்பம் பகுதியில் நிறுத்தப்பட்டது. இதில் அப்பகுதி கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் செய்து வழிபாடுகள் நடத்தினர். 4ம் நாளான இன்று காலை பெருமாள்குப்பம் பகுதியில் இருந்து துவங்கும் திருத்தேர் பவனி மாலை 6 மணி அளவில் தேர் நிலைக்கு வந்தடைகிறது. இதில் விடுமுறை தினமான இன்று சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்களும், வேலூர் மாவட்டம் மட்டுமின்றி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்தும் வள்ளிமலையில் திரண்டு வருகின்றனர்.

Related Stories: