தர்மபுரி: தர்மபுரி அருகே, நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் மகாபாரத விழா நடைபெற்று வருகிறது. இதில் 24 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.தர்மபுரி அருகே நாயக்கன்கொட்டாய் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோயிலில் 20வது ஆண்டு மகாபாரத விழா கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் மகாபாரத பிரசங்க சொற்பொழிவு, இரவு நேரங்களில் மகாபாரத நாடகம் நடைபெற்று வருகிறது. விழாவில் 24 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
நேற்று அர்ஜூனன் தபசு என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. அப்போது 18 படிகள் கொண்ட தவசின் மீது அர்ஜூனன் ஏறி தவம் இருக்கும் நிகழ்ச்சி தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டது. இதில் விரதம் இருந்த பெண்கள், அர்ஜூனனிடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து இரவு குறவஞ்சி நாடகம் நடைபெற்றது.இன்று (4ம்தேதி) முதல் தினசரி பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நடக்கிறது. வரும் 9ம் தேதி துரியோதனன் படுகளம், 10ம் தேதி தருமர் பட்டாபிஷேகம் குறித்த சொற்பொழிவு நடக்கிறது. வரும் 8ம் தேதி 18ம் நாள் போர் என்ற தலைப்பிலும், 9ம் தேதி துரியோதனன் படுகளம் தலைப்பிலும் நாடகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் துரைசாமி, மணி, தர்மலிங்கம் மற்றும் 24 கிராம மக்கள் செய்துள்ளனர்.










