×

பாலக்கோடு அரசு பள்ளி அணி முதலிடம்

தர்மபுரி: தர்மபுரியில் நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் பாலக்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பிடித்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைத்தின் சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டிகள்  நடைபெற்றன. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப் பிரிவினருக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த இறுதி போட்டிகளை, மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். கபடி கழக மாவட்ட செயலாளர் கருணாகரன், உடற்கல்வி ஆசிாியர் ரவி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், நடுவர்கள் இந்த போட்டிகளை முன்னின்று நடத்தினர்.  பள்ளி மாணவர்கள் பிரிவு போட்டியில், பாலக்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம், பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி 2வது இடம், ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளி 3வது இடம் பிடித்தன.

இதேபோல், மாணவிகள் பிரிவில் கடகத்தூர் அரசு பள்ளி முதலிடம், தர்மபுரி அவ்வையார் அரசு பள்ளி 2வது இடம், அதியமான்கோட்டை அரசு பள்ளி 3வது இடம் பிடித்தன. கல்லூரி மாணவர்கள் பிரிவில், தர்மபுரி காமதேனு கல்லூரி முதலிடம், டான் பாஸ்கோ கல்லூரி 2வது இடம், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி 3ம் இடம் பிடித்தன. கல்லூரி மாணவிகள் பிரிவில், மாட்லாம்பட்டி சக்தி கைலாஷ் கல்லூரி முதலிடம், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி 2வது இடம், பாலக்கோடு அரசு கலைக்கல்லூரி 3வது இடம் பிடித்தன. பொதுப்பிரிவில் பி.அக்ரகாரம் அணி முதலிடம், மொரப்பூர் அணி 2வது இடம், சோலைக்கொட்டாய் அணி 3வது இடத்தை பெற்றனர். முன்னதாக பொதுப்பிரிவின் போட்டியை வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தர்மபுரி அரசு காது கேளாதோர் பள்ளி முதலிடம், தர்மபுரி ஊனமுற்றோர் பள்ளி 2வது இடம், அரசு காது கேளாதோர் பள்ளியை சேர்ந்த மற்றொரு அணி 3வது இடம் பிடித்தன. அரசு ஊழியர்களுக்கான போட்டியில், தர்மபுரி காவல்துறை அணி முதலிடம், நரிப்பள்ளி ஆசிரியர்கள் அணி 2வது இடம், நல்லம்பள்ளி ஒன்றிய ஆசிரியர் அணி 3வது இடம் பிடித்தன.
மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பொதுப்பிரிவு மற்றும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அணி, நேரடியாக மாநில போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.



Tags : Palakode Government School ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா