×

பனியன் தொழிலில் சார்ந்த திருப்பூரில் ஆம்னி பஸ் நிலையம் அமைக்க கோரிக்கை

திருப்பூர்,பிப்.27: திருப்பூருக்கு வெளி மாவட்டத்தினரின் வருகை அதிகரித்துள்ளதால் ஆம்னி பஸ் நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். டாலர் சிட்டி, குட்டி ஜப்பான் என்றெல்லாம் அழைக்கப்படும் திருப்பூர் பகுதியில் பின்னலாடை தொழில்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில்களான டையிங், நிட்டிங், காம்பேக்டிங், வாசிங், விசைத்தறி உள்ளிட்ட தொழில்களும் மற்றும் உடுமலை பகுதியில் விவசாயமும், காங்கயம் தேங்காய் களம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்றுக்  கொண்டிருக்கிறது.

இந்த தொழில்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வெளி மாநிலங்களான அசாம், ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் பரவலாக வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி இங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். தினசரி வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் ரயில்களில்  சுமார் 400 பேர் புதியதாக திருப்பூருக்கு வேலைக்காக வருகின்றார்கள். இடைத்தரகர்கள் மூலம் ரயில் நிலையத்திலேயே அவர்களுக்கான பணி இடத்தை தேர்வு செய்து பிரித்து அனுப்புகின்றார்கள்.

இந்நிலையில், வெளிமாவட்டத்திலிருந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் திருப்பூர் முகவரியிலே ரேஷன் கார்டுகள் பெற்று வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தொழில் நிமித்தமாகவும், தங்கள் சொந்த ஊர்களுக்கு அவசரமாக செல்லக்கூடிய சூழலில் அரசு பேருந்து, ரயில் சேவை ஆகியவற்றை பயன்படுத்தினாலும், பெரும்பாலானோர் ஆம்னி பஸ்களை பயன்படுத்துகின்றனர். அதிகப்படியான ஆம்னி பஸ்கள் திருப்பூர் புஸ்பா தியேட்டர் பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றி செல்கிறது. சில ஆம்னி பஸ்கள் பொள்ளாச்சியில் இருந்து வருகிறது. அந்த ஆம்னி பஸ்கள் பல்லடம், கலெக்டர் அலுவலகம், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் பயணிகளை ஏற்றிய பின்னர் புஸ்பா தியேட்டர் வந்தடைகிறது.

மேலும், பெரும்பாலான பஸ்கள் கோவை-சென்னை, கோவை-பெங்களூர், கோவை-ஹதராபாத், கோவை-விஜயவாடா, கோவை - திருப்பதி, ஆகிய பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. அந்த பஸ்கள் இரவு நேரங்களில் திருப்பூரில் உள்ள பயணிகளை ஏற்றி செல்ல அவிநாசி வழியாக திருப்பூர் புஸ்பா தியேட்டர் பகுதியில் வந்து ஏற்றி செல்கிறது. அப்படி வரும் அம்னி பஸ்கள் மாநகருக்குள் இரவு நேரங்களில் அதிவேகமாக வருவதால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 50க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் தினசரி புஸ்பா தியேட்டர் பகுதியில் மட்டும் வந்து செல்கிறது. இந்த 50 பேருந்துகளும் புஸ்பா தியேட்டர் பகுதியில் சுமார் 20 நிமிடம் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சில ஆம்னி பஸ்களில் பார்சல் ஏற்றி செல்வதால் ரோடுகளில் பார்சல் பண்டல்களை வைத்து ஏற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதனால் புஸ்பா தியேட்டர் பகுதி இரவு நேரத்தில் ஆம்னி பஸ் ஸ்டாண்டு போல் காட்சியளிக்கிறது. எனவே, திருப்பூருக்கென தனி ஆம்னி பஸ் ஸ்டாண்டு இல்லாத நிலையில் ஆம்னி பஸ் ஸ்டாண்டு அரசு சார்பில் அறிவிப்பு செய்து அமைத்துகொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து புஸ்பா சந்திப்பில் உள்ள கடை உரிமையாளர்கள் கூறியதாவது: திருப்பூர் புஸ்பா தியேட்டர் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த பகுதியில் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை உள்ளது. இந்நிலையில், பகல் நேரங்களில் அரசு தனியார் பஸ்களை நிறுத்துவதால் வியாபாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.  அதனை மாற்ற தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். இந்நிலையில், இரவு நேரங்களில் கடைகளுக்கு முன்பு ஆம்னி பஸ்களை நிறுத்தி வைத்து கொள்கிறார்கள். இதனால் வியாபாரம் பாதிக்கின்றது. இதனால் அரசாங்கம் சார்பில் கோவை, மதுரை, திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளில் உள்ளதை போல திருப்பூருக்கென  ஆம்னி பஸ்களை மட்டும் நிறுத்துவதற்கென பஸ் ஸ்டாண்டு அமைத்து கொடுத்தால் பொதுமக்களும், பயணிகளுக்கு எளிமையாக இருக்கும். இதனால் அரசுக்கும் வருவாய் ஏற்படும். இவ்வாறு கூறினர்.

Tags : Omney bus station ,Tiruppur ,Banyan ,
× RELATED திருப்பூரில் பொதுமக்களை கடித்த 8 வெறிநாய்கள்