×

போலி மருத்துவர்களை கண்டறிய 5 குழு அமைப்பு

தர்மபுரி, பிப்.24: தர்மபுரி மாவட்டத்தில் போலி மருத்துவர்களை ஒழிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 22 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவில் கிராமங்கள் உள்ளன. இதில் மலை மற்றும் வனம் சார்ந்த குக்கிராமங்கள் அதிகம் உள்ளன. இந்த கிராமங்களில் போதிய மருத்துவ வசதி கிடையாது. இதனால் பாரம்பரியமாக நாட்டு வைத்தியம், அனுபவ வைத்தியம் செய்யும் நபர்களிடம் தான் பொதுமக்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

இவர்களில் சிலர் முறையாக படிக்காமல் மருத்துவர், செவிலியர்களிடம் உதவியாளர்களாக சில காலங்கள் வேலை செய்து, அதில் கிடைக்கும் அனுபவத்தை வைத்து, கிராமங்களில் சிகிச்சை அளிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் கூலித்ெதாழிலாளர்களாகவும், விவசாய கூலித்தொழில் செய்து வருகின்றனர். கல்வியில் தற்போது தான் சற்று முன்னேறி வருகின்றனர். இங்குள்ள போலி மருத்துவர்கள், சிகிச்சைக்காக வருபவர்களிடம் குறைந்த கட்டணமே பெறுவதால், நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல ஆகும் செலவை காட்டிலும் குறைவு என, அவரிடமே சிகிச்சை பெறுகின்றனர். இதனால், பல்வேறு சமயங்களில் நோயாளிகள் பாதிக்கப் படுவதும், சிலர் உயிரிழக்கவும் செய்கின்றனர்.

இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் போலி மருத்துவர்களை ஒழிக்க, தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் நலப்பணிகள் இணை இயக்குனர் தலைமையிலும், பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப் பட்டி தாலுகா மருத்துவமனையில், அந்தந்த மருத்துவர்கள் தலைமையில் போலி மருத்துவர்களை கண்டறிந்து ஒழிக்க, 5 குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் 3 மருத்துவர்கள் உள்பட 5 பேர் இடம் பெற்றுள்ளனர். பொதுமக்கள் மற்றும் ரகசிய தகவல், புகாரின் பேரில், இந்த குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று, விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். கடந்த ஆண்டு 22 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் போலி டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே இருக்கிறது. மாவட்டம் தோறும் இதுபற்றி கண்காணித்து, மாவட்டத்தில் உள்ள இணை இயக்குனர்கள், போலீசார் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேஷனல் மெடிக்கல் கமிஷன் சட்டம், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், போலி டாக்டர்களுக்கு எதிராக புதிய நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, முறையாக எம்பிபிஎஸ்., படிக்காமல், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவுபெறாமல், அலோபதி மருத்துவம் செய்து வரும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

அலோபதி, சித்தா, ஓமியோபதி, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் படித்து, முறையாக  சான்று பெற்றவர்கள் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். எந்த மருத்துவமும் படிக்காமல், தகுதியில்லாமல் சிகிச்சை  அளித்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  முறையான படிப்பு, தகுதி இல்லாத நபர்களிடம் சிகிச்சை பெறுவதை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் போலி மருத்துவர்களை கண்டறிந்து ஒழிக்க 5 தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 22 போலி மருத்துவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா