தர்மபுரி, பிப்.23: தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நேற்று தண்ணீரை கலெக்டர் சாந்தி திறந்துவைத்தார். இதன் மூலம் 4500 ஏக்கர் பாசன பகுதிகள் பயனடையும். தினசரி 30 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தர்மபுாி மாவட்டம் பஞ்சப்பள்ளியில் சின்னாறு அணை உள்ளது. இந்த அணை கடந்த 1977ல் கட்டப்பட்டது. 50 அடி முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கும் வசதியுள்ளது. இந்த அணைக்கு நீர்பிடிப்பு பகுதியாக தளி, பெட்டமுகிலாளம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழைக்கு சின்னாறு அணை நிரம்பியது. கடந்தாண்டு 4 முறை அணைகள் நிரம்பியுள்ளன. தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நீர்பாசனத்திற்கும், குடிநீருக்கும் நீராதாரமாக உள்ளது. சின்னாறு அணையில் இருந்து தான் தர்மபுரி நகரத்திற்கு குடிநீர் எடுத்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் சின்னாறு அணை நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இந்த உபநீர் பாப்பாரப்பட்டி பாசன திட்டத்தின் கீழ் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. இதில் 10 ஏரிகள் நிரம்பின. இதுபோல் சோகத்தூர், கடகத்தூர், ராமக்காள் ஏரிகளுக்கும், அணையின் உபரிநீர் திருப்பி விடப்பட்டது.
இந்த ஏரிகள் நிரம்பின. 15 ஆண்டுகளுக்கு பிறகு சோகத்தூர், கடகத்தூர் ஏரிகள் நிரம்பின. ஏரிகளை நம்பியிருந்த பாசன விவசாய நிலங்களில் நெல், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தனர். சின்னாறு அணைக்கு நீர்பிடிப்பு பகுதியில் இருந்து தண்ணீர் வரத்து சரிந்ததை அடுத்து உபரிநீா் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கை ஏற்று தமிழக அரசின் உத்தரவின்படி, மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று சின்னாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார். புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு நேற்று முதல் 90 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தினசரி 30 கனஅடி என்ற அளவில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. வரும் ஏப்ரல் 5ம் தேதி முதல் பழைய ஆயக்கட்டு பகுதி ஏரிகளை நிரப்புவதற்கு, அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.
ஒட்டு மொத்தமாக 4,500 ஏக்கர் நிலங்கள் பயனடையும் வகையில் மொத்தம் 451.49 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கூறியதாவது: பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டுக்கு தண்ணீர் திறப்பதன் மூலம் 4500 ஏக்கர் நிலம் பாசனவசதி பெருகிறது. இதன் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, அத்திமுட்லு மாரண்டஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலான், பாலக்கோடு, குஜ்ஜரஅள்ளி, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சாமனூர் ஆகிய கிராமங்கள் பாசனவசதி பெருகின்றன.
பஞ்சப்பள்ளி கிராமம் சின்னாறு நீர்தேக்கத்தில் தற்போது உள்ள நீரினை கொண்டு சிக்கனமாக பயன்படுத்தி, பாசனம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே விவசாய பொதுமக்கள் நீர்வள ஆதாரத் துறையினருடன் ஒத்துழைத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் பாபு, உதவி பொறியாளர் சாம்ராஜ், பாலக்கோடு தாசில்தார் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘சின்னாறு அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பால் நெல், கரும்பு சாகுபடி பரப்பு அதிகரிக்கும். பூச்செடிகள், காய்கறிகள் சாகுபடி செய்ய உதவியாக இருக்கும்.இதனால் விவசாயப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெறும்’ என்றனர்.