×

(தி.மலை) அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல் தண்டராம்பட்டு அருகே பரபரப்பு

தண்டராம்பட்டு, பிப்.22: தண்டராம்பட்டு அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் இருந்து அத்தியந்தல், நெடுங்கவாடி, கீழ்வணக்கம்பாடி, தண்டராம்பட்டு வழியாக எடத்தனூர் கிராமத்திற்கு தடம் எண்-40பி என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி காலை 7.15 மணிக்கும் இயக்கப்படும் இந்த பஸ்சில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். இதனால், மாணவ, மாணவிகள் காலை உணவுகூட சாப்பிடாமல் முன்கூட்டியே பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த பஸ்சை காலை 7.45 மணிக்கு இயக்கினால் உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு ெசல்ல உதவியாக இருக்கும். எனவே, மாணவர்களின் நலன் கருதி காலை 7.45 மணிக்கு அந்த பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்களும், மாணவர்களும் கலெக்டர் மற்றும் போக்குவரத்து மண்டல அலுவலரிடம் பலமுறை மனு அளித்தார்களாம்.

இருப்பினும், அந்த அரசு பஸ் வழக்கம்போல் காலை 7.15 மணிக்கே இயக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை அவ்வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தண்டராம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய ேநரத்தில் அரசு பஸ்சை இயக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்று, மாணவர்கள் மறியலை கைவிட்டு அரசு பஸ்சை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Th. ,Thandaramptu ,
× RELATED (தி.மலை) நடைபாதை வியாபாரிகள்...