ஆவடி, பிப். 21: ஆவடி மாநகராட்சி ஒரு மாதத்தில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து ரூபாய் 1.85 லட்சம் அபராதம் வசூல் செய்துள்ளது. ஆவடி மாநகராட்சி சாலையில் சுற்றி திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கினர். மாடுகளால் ஏற்படும் விபத்தால் உயிரிழப்புகள் எண்ணிக்கை, கடந்தாண்டு 6 ஆகவும், காயம் ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆகவும் இருந்தன. ஒவ்வொரு மாமன்ற கூட்டத்தின் போதும், மாடுகளால் ஏற்படும் தொல்லைகள் குறித்து உறுப்பினர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த நவ. 30 ம் தேதி நடந்த மாமன்ற கூட்டத்தில், மாடுகளால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, சாலையில் மாடுகளை திரிய விடும் உரிமையாளருக்கு, மாடுகளுக்கு ரூ 10 ஆயிரமும், கன்றுக்குட்டிக்கு ₹ 5 ஆயிரமும் அபராதம் விதிப்படும் என மாநகராட்சி அதிரடியாக அறிவித்தது. அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகள், திருமுல்லைவாயில் சோழம்பேடு சாலையில் உள்ள, மாநகராட்சி காலி இடத்தில் மாட்டுத் தொழுகை அமைத்து பராமரிக்கப்படும் என்று கூறப்பட்டது.
அதன்படி, கடந்த ஒரு மாதத்தில் இதுவரை சாலையில் சுற்றி திரிந்த 27 மாடுகள் மற்றும் 5 கன்றுக்குட்டிகள் பிடிக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக மாட்டின் உரிமையாளர்களுக்கு ₹ 1 .85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், அபராத தொகையை கட்டி 16 மாடுகள் மற்றும் 5 கன்றுக்குட்டிகள் உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 11 மாடுகளை உரிமைக்கோரி யாரும் முன் வராததால், உரிய நடைமுறைகளை பின்பற்றி 6 மாடுகள் பொது ஏலத்தில் விடுபட்டு, அதன் வாயிலாக ரூ 61500 பெறப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள 5 மாடுகளை, உரிமை கோரவும், ஏலம் எடுக்க யாரும் முன் வராததால் ஆவடி அடுத்த மேல்பாக்கத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆவடி சுகாதார அலுவலர் கூறுகையில் ஆ வடி மாநகராட்சிக்கு உட்பட்ட சி.டி.எஸ் சாலை, ஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருமுல்லைவாயில், பட்டாபிராம் போன்ற பகுதிகளில் இருந்து இதுவரை 27 மாடுகள் 5 கன்று குட்டிகள் பிடிக்கப்பட்டது.
மாநகராட்சிக்கு சொந்தமாக மாடு பிடிக்கும் வாகனம் இல்லாததால் போக்குவரத்து காவல்துறையின் இருசக்கர வாகனம் ஏற்றும் டூவீலர் ரெக்கவரி வாகனத்தை வைத்து வாரத்தில் ஒரு நாள் மட்டும் மாடுபிடிக்கப்பட்டது. மேலும் இப்பணியை தீவிர படுத்த ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் மாநகராட்சிக்கு சொந்தமாக மாடு பிடிக்கும் வாகனம் வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் இறுதிக்குள் சொந்த மாடு பிடிக்கும் வாகனம் வாங்கப்படும், சொந்த வாகனம் இருந்தால் மாதத்திற்கு சுமார் 100க்கும் மேற்பட்ட மாடுகளை பிடிக்க முடியும் என்று கூறினார்.
