×

இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு முடித்தால் மீன்வளத்துறையில் அரசு வேலை எளிதாக கிடைக்கும்: 1000 விவசாயிகளை ஈடுபட வைப்பதே நோக்கம்

தஞ்சாவூர் செப். 24: இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு படித்தால்மீன்வளத்துறையில் அரசு வேலைக்கு எளிதாக கிடைக்கும் என்று தஞ்சாவூரில் துணை வேந்தர் சுகுமார் கூறினார்.
தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலை சூரக்கோட்டை அருகில் உள்ள தஞ்சாவூர் வளங் குன்றா நீரூயிரி வளர்ப்பு இயக்க அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நீருயிரி வளர்ப்பாளர்கள் கூட்டம் மற்றும் மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கான கண்காட்சி கருத்தரங்கம் நேற்றுநடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ. சுகுமார் தலைமை வகித்தார். மைய இயக்குநர் ஸ்டீபன் முன்னிலை வகித்தார். கூட்டம் முடிந்த பிறகு மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ.சுகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மீன் வளர்ப்பு என்பது குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் ஈட்டக்கூடிய தொழிலாகும்.

மீன்வளப் பல்கலைக்கழகம் சார்பில் இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பட்டப் படிப்பை நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டும். இதற்கு கல்வி தகுதி பிளஸ்+2 தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் 55 சதவீதம் தேர்ச்சி இருக்க வேண்டும். இதில் மீனவ சமூகத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த படிப்பு படிக்க அரசு நிதி உதவியும் அளித்து வருகிறது. குறிப்பாக, மீன்வளத்துறையில் அரசு சார்பில் எளிதாக வேலைக்கு சென்றுவிடலாம். மீன் வளப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் கொடுக்கும் நிதியைத் தவிர, பிற நிறுவனங்களில் இருந்தும் நிதி பெற்று ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம். குறிப்பாக மீன்வளம் குறித்த கல்வி, விரிவாக்கம் மற்றும் ஆராய்ச்சி போன்றவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீனின் தரம் மற்றும் நவீன மீன் வளர்ப்பு ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படுகிறது. மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மீன் வளர்ப்பின் போது மீன்களுக்கு ஏற்படும் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை இருந்த இடத்திலிருந்து இந்த செயலி மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரி மீன் வளர்ப்பு திட்டத்தின் மூலம் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 25 சதவீதம் தமிழக அரசு மானியமும், மீதி 25 சதவீதம் பயனாளியின் பொறுப்பாகும். மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் கண்டிப்பாக மீன்களுக்கான இன்சூரன்ஸ் (பாலிசி) கட்டாயம் செய்திருக்க வேண்டும். இப்பகுதியில் சுமார் 1000 விவசாயிகளை மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட வைப்பதே எங்கள் நோக்கமாகும். தமிழகத்தில் சுமார் 5.5 லட்சம் மெட்ரிக் டன் மீன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 1.1 லட்சம் மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவர் துணைவேந்தர் முனைவர் கோ.சுகுமார் கூறினார்.

Tags :
× RELATED திருத்தங்கல்லில் சாலையின் நடுவே...