×

திருப்பூர் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த காங்கயம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

காங்கயம், செப். 21: காங்கயத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். காங்கயத்தில் இருந்து பழையகோட்டை செல்லும் சாலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவிலில் கடைசியாக கடந்த 1996ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்துள்ளது.

தற்போது இக்கோவிலில் பல இடங்களில் சிதலமடைந்து காணப்படுவதால், கோவிலை புனரமைக்க கோவில் நிர்வாகம் சார்பில் முடிவெடுக்க பட்டுள்ளது. இதற்காக அறநிலையத்துறையின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. மேலும் கோவில் முழுவதும் கற்களால் கட்டப்பட்டுள்ளதால், அவற்றின் பழமை தன்மை மாறாத வகையில் புனரமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக திருப்பூர் மாவட்ட தொல்லியல் துறை முதன்மை ஆலோசகர் அர்ஜுனன் தலைமையிலான தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவிலில் சேதமடைந்த பகுதிகள், மண்டபம், சிலைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின் இவற்றை அறிக்கையாக தொல்லியல்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்படும் என தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags : Tirupur Archeology Department ,Kangayam Kashi Vishwanath Temple ,
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்