×

நெல்லை அருகே பள்ளமடையில் 50 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

நெல்லை, செப். 3: நெல்லை சுற்றுவட்டாரங்களில் பெய்து வரும் மழை காரணமாக பள்ளமடையில் 50 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. தென்மேற்கு பருவமழை காலம் நிறைவு பெற்றும் தென்மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. தினமும் முற்பகலில் நல்ல வெயில் காணப்பட்டாலும், பிற்பகலில் வானம் மேகமூட்டத்தோடு மாறி, பல்வேறு இடங்களில் நல்ல மழை காணப்படுகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகளான பாபநாசம், மணிமுத்தாறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

நெல்லை அருகே மானூர் மற்றும் பள்ளமடை பகுதிகளிலும் கடந்த இரு தினங்களாக மாலை வேளையில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாய பயிர்கள் சேதத்திற்கு உள்ளாகி வருகின்றன. பள்ளமடை சுற்றுவட்டாரத்தில் இவ்வாண்டு சில விவசாயிகள் வழக்கத்திற்கு மாறாக குளம் மற்றும் கிணற்று நீரை நம்பி நெல் சாகுபடியை மேற்கொண்டனர். கடந்த ஒரு வாரமாக மானூர் வட்டாரத்தில் நல்ல மழை காணப்படுவதால், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்து வருகின்றன. பல்லிக்கோட்டை, அலவந்தான்குளம் பகுதியிலும் நெல் பயிரிட்ட விவசாயிகள் மழையால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளமடையை சேர்ந்த விவசாயி முத்துக்குமார் கூறுகையில், ‘‘கடந்த 3 தினங்களாக பள்ளமடையில் பெய்து வரும் மழை காரணமாக எங்களது நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. குளம் அருகில் உள்ள நிலையில் தண்ணீரை வடிய வைப்பதும் சிரமமாக உள்ளது. வயலில் சில இடங்களில் நெல் முளைத்து சேதமாகி விட்டது. கடந்த ஜூன் மாதம் வயல்களில் சாகுபடியை தொடங்கினோம். அறுவடை நேரத்தில் பெய்த மழையால் மகசூல் அதிகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது’’ என்றார். பள்ளமடை பகுதியில் மட்டுமே சுமார் 50 ஏக்கரில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. விவசாயிகள் தண்ணீரை வடிய வைக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Pallamadai ,Nellai ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு