இறங்கும் முன் பஸ்சை எடுத்ததால் மூதாட்டி பலி, மகன்களுக்கு ரூ.7.82 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; எம்டிசிக்கு தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை, ஆக. 27: இறங்கும் முன்பே பேருந்தை நகர்த்தியதில் உயிரிழந்த மூதாட்டியின் வாரிகளுக்கு, 7.82 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த கேட்டரிங் நிறுவனத்தில் பணியாற்றிய ஜெயம் என்ற மூதாட்டி 2014 டிசம்பர் 22ல் கே.கே.நகர்-அண்ணா சதுக்கம் சென்ற பேருந்தில் பயணித்தார். தியாகராய சாலை பஸ் நிறுத்தத்தில், ஜெயம் இறங்க முயன்ற போது ஓட்டுனர் பஸ்சை எடுத்ததால் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தாயின் மரணத்துக்கு இழப்பீடு கோரி, ஜெயத்தின் மகன்கள் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த முதன்மை சிறப்பு நீதிபதி திருமகள், பயணி இறங்குவதற்கு முன் ஓட்டுனர் அஜாக்கிரத்தையாக பஸ்சை  இயக்கியதே மூதாட்டி உயிரிழப்புக்கு காரணம். எனவே, 7.82 லட்சம் ரூபாய் இழப்பீடாக ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: