×

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோயில் கொடைவிழாவில் மஞ்சள் பெட்டி ஊர்வலம்

நெல்லை,ஆக.27: திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோயில் ஆவணி பெருங்கொடை விழாவில் சிறுமிகள், பெண்கள் கலந்து கொண்ட மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடந்தது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோயில் ஆவணி பெருங்கொடை விழா கடந்த 21ம் தேதி துவங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. 6ம் நாள் கொடை விழா நேற்று காலை அன்ன பூஜையுடன் துவங்கியது.
காலை முதல் நள்ளிரவு வரை தொடர் அன்னதானம் நடந்தது. மன்னராஜா கோயிலில் இருந்து தாரை, தப்பட்டை முழங்க சிறுமியர் மற்றும் பெண்கள் மஞ்சள் பெட்டியுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், சுவாமி மஞ்சள் நீராடலும் நடந்தது.

இரவு சுடலை ஆண்டவர் திடலில் கடந்த ஆறு நாட்களாக நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து குட்டீஸ் பேஷன் ஷோ, மேஜிக் ஷோ, கரக கலை நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை வரை கோயிலில் இருந்து பேரூந்து நிலையம் வரை உள்ள சாலையில் பல்வேறு இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கோயிலில் வாணவேடிக்கை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் வரிதாரர்கள் செய்திருந்தனர்.

Tags : Yellow Box Procession ,Vektianvilai Sudalai Andavar Temple Consecration Ceremony ,
× RELATED காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி...