×

சூழல்உணர் திறன் மண்டல பிரச்னை கூடலூர்,பந்தலூர்,முதுமலை,மசினக்குடியில் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு

கூடலூர்,ஆக.26: சூழல் உணர்திறன் மண்டல பிரச்னைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர்,பந்தலூர்,முதுமலை மற்றும் மசினக்குடியில் வியாபாரிகள் வணிகநிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றினர். வனவிலங்கு சரணாலயங்களை ஒட்டி உள்ள வான்வழி தொலைவில் ஒரு கிலோ மீட்டர் பகுதியை சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்ததை மறு பரிசீலனை செய்யக் கோரியும் மக்களின் போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் உச்ச நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொள்ளும் என்ற நோக்கிலும், மத்திய, மாநில மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கூடலூர், பந்தலூர், மசனகுடி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வணிக நிறுவனங்களில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நேற்று  துவங்கியது.  

கூடலூர் அரசு பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் ஏஜே தாமஸ் தலைமையில்,கூடலூர் நகர வணிகர் சங்க உறுப்பினர்களின் முன்னிலையில் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் துவக்கி வைக்கப்பட்டது. கூடலூர் நகர வணிகர் சங்க தலைவர் அப்துல் ரசாக், மாவட்ட  வணிகர்  சங்க கூடுதல் செயலாளர் பாதுஷா, துணைத் தலைவர் முகமது சபி,நகர சங்க செயலாளர் சம்பத்குமார், துணைத் தலைவர்கள் திகம்பரம்,பீட்டர், செய்யது அமர்கான் மற்றும் வணிகர் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்து  நகர வணிகர் சங்க தலைவர் ரசாக் கூறுகையில், ‘‘கூடலூர் பகுதியில் கடந்த அரை நூற்றாண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ள பிரிவு 17 பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு வருகின்றன. புலிகள் காப்பக திட்டம் கொண்டு வரப்பட்டு கூடலூர்- மைசூர் சாலையில் இரவு போக்குவரத்து தடுக்கப்பட்டதால் கூடலூர் பகுதியில் வியாபாரம் தொழில் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மசினகுடி பகுதியில் வசிக்கும் மக்கள் சுதந்திரமற்ற சிறை கைதிகளை போல தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். 1991ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் இரண்டு எக்டருக்கும் குறைவாக உள்ள நில உரிமையாளர்களையும் தேவையின்றி சட்டத்திற்கு முரணாக உட்படுத்தியதால் அந்த நிலங்களை வைத்திருப்பவர்கள் அடிப்படை பொருளாதாரத் தேவைகளுக்காக நிலங்களை விற்க வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.

உள்ளாட்சிகளின் அதிகாரங்களை பறிக்கும் வகையிலான செயல்பாடுகளால் கட்டிடத் தொழிலாளர்கள் கூலித் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களைக் கொண்ட இப்பகுதியில் தனியார் தோட்ட பராமரிப்புகளுக்கு வனத்துறையின் கட்டுப்பாடுகள் காரணமாக பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டு வனவிலங்குகள் காபி, தேயிலை தோட்டங்களுக்கு புகுந்து  மனித உயிர்களை பழிவாங்கும் நிலை அதிகரித்து வருகிறது.

இப்பகுதியின் பொருளாதார உயிர்நாடியான தேயிலை விவசாயத்தில் பசுந்தயிலைக்கு விவசாயிகளுக்கு கிடைக்கும் விலை கட்டுப்படியாகததால் விவசாயிகளும் நஷ்டத்தில் உள்ளனர். விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாரம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சூழல் உணர்திறன் மண்டலம் என்ற பெயரில் பெரும்பாலான கிராம மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதில் தமிழக அரசு மக்களின் பிரச்னைகளை உணர்ந்து நீதிமன்றத்திற்கு எந்தவிதமான அறிக்கையை மேல் முறையீடு செய்துள்ளது என்பது தெரியாத நிலையில் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்துடனும், அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மத்தியிலும் பல கட்ட பேச்சுவார்த்தைகளையும் கோரிக்கைகளையும் முன்னெடுத்து சென்றுள்ளோம். ஆனால் இதுவரை மக்களுக்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்காத நிலை உள்ளது. எனவே தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டத்தை வியாபாரிகள் சார்பில் துவக்கி உள்ளோம். கூடலூர் சட்டமன்றத் தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

 இந்நிலையில் இப்பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உள்ள  மதுரை ஊராட்சி கிராம மக்கள் சார்பில் வரும் 27ம் தேதி சனிக்கிழமை மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். பந்தலூர் சுற்றுவட்டாரம் பகுதிகளான பந்தலூர், கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, சேரம்பாடி, எருமாடு உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகளில் வியாபாரிகள் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Tags : Kudalur ,Bandalur ,Mudumalai ,Masinakudi ,
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...