×

காரில் கடத்தி சென்று பணம் கேட்டு தாக்கியதாக மாஜி நிர்வாகி மீது பவானிசாகர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரன் பரபரப்பு புகார்

சத்தியமங்கலம், ஆக.26: முன்னாள் அதிமுக நிர்வாகி பணம் கேட்டு மிரட்டி காரில் கடத்தி சென்று தன்னை தாக்கியதாக கூறி, காயமடைந்த பவானிசாகர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரன் பரபரப்பு புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புஜங்கனூர் பகுதியை சேர்ந்தவர் எஸ். ஈஸ்வரன் (45). இவர் கடந்த 2016 முதல் 2021 ம்  ஆண்டு வரை பவானிசாகர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். தற்போது புஜங்கனூரில் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் தன்னை கடத்திச் சென்று அதிமுக முன்னாள் நிர்வாகி மிலிட்டரி சரவணன் தரப்பு கும்பல், பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்ததாகவும், இதில் தான் காயம் அடைந்ததாகவும் கூறி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக ஈஸ்வரன் சேர்ந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு மாஜி எம்எல்ஏ ஈஸ்வரன் அளித்த பேட்டி:  புஜங்கனூரில் இருந்து எனது பைக்கில் பவானிசாகர் ஸ்டேட் பேங்க்   சென்றுவிட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மதியம் சத்தியமங்கலம் -  மேட்டுப்பாளையம் சாலையில் மல்லியம்பட்டி பிரிவு அருகே வந்தேன். அப்போது எனது பைக்கின் பின்னால் ஒரு கார் வந்தது. திடீரென பைக்கை வழிமறித்து காரில் இருந்து இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல், என் கண்களை துணியால் கட்டி காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.

அரை மணி நேரம் காரில் சென்றபின்னர், அடையாளம் தெரியாத ஒரு வீட்டில் வைத்து, ரூ. 3 கோடி பணம் கேட்டு மிரட்டி என்னை அடித்து அவர்கள் துன்புறுத்தினர். இதையடுத்து வீட்டிற்கு அழைத்து வந்து ரூ.1.50 கோடி கொடுத்ததால்  நேருநகர் பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி மிலிட்டரி சரவணன் அங்கு வந்து விடுவித்தார். இந்த கடத்தல் கும்பலுக்கும்  மிலிட்டரி சரவணனுக்கும் தொடர்பு உள்ளது. இது குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு, மாஜி எம்எல்ஏ ஈஸ்வரன் பரபரப்பு புகார் கூறினார்.

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரன் பின்னர் கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்ட பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர். இந்நிலையில், புகாரில் சிக்கியுள்ள மிலிட்டரி சரவணன், தற்போது புகார் கூறியுள்ள முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரனிடம் உதவியாளராக ஏற்கனவே இருந்ததாகவும், உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டதால் அதிமுகவில் இருந்து மிலிட்டரி சரவணன் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags : AIADMK ,Easwaran ,Bhawanisagar ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...