×

தனியார் பள்ளியில் விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு கோட்டாட்சியர் தீடீர் ஆய்வு

பழநி, ஆக. 8: தமிழகத்தில் கல்வி கற்பதில் மன அழுத்தம் ஏற்பட்டு மாணவர்கள் விபரீத முடிவுகள் எடுப்பது அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாதென எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பழநி பகுதியில் வார விடுமுறை தினமான நேற்று சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் புகார்கள் கிளம்பின. இதனைத்தொடர்ந்து பழநியில் சண்முகநதி அருகில் உள்ள தனியார் பள்ளியில் கோட்டாட்சியர் சிவக்குமார் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளை அழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்தது தெரியவந்தது. கோட்டாட்சியரை கண்ட பள்ளி நிர்வாகத்தினர் ஓடி, ஒளிந்து கொண்டனர். இதனால் பள்ளியின் முதல்வர் மற்றும் நிர்வாகிகளின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்தார். ஆனால், யாரும் வரவில்லை. பின் பள்ளியில் இருந்த சில ஆசிரியர்களை அழைத்து கண்டித்தார். மாணவர்களை வீட்டிற்கு அனுப்புமாறு உத்தரவிட்டார். மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுத்தார். விடுமுறை நாளில் பள்ளிக்கு வரவழைத்து விட்டனரே என வருத்தத்தில் இருந்த மாணவ, மாணவிகள் கோட்டாட்சியருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்திய பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Tags : Kotatchiyar Theedir ,
× RELATED நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1...