×

தென்பெண்ணை ஆற்றங்கரையோர 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

கிருஷ்ணகிரி, ஆக.5: கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 8150 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர்திறப்பு காரணமாக, கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 2 நாட்களாக பெய்த கனமழையால், நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 2800 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 6300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மதியம் 1 மணியளவில் நீர்வரத்து 6,300 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், 51 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதையடுத்து, அணையின் பிரதான 3 மதகுகள் மற்றும் 3 சிறிய மதகுகள் வழியாக, 8150 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்கிறது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. யாரும் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘கெலவரப்பள்ளி அணையில் இருந்தும், கர்நாடகா மாநிலம் ஏர்கோல் அணையில் இருந்தும், தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேயன் நதியில் இருந்தும், அதிக அளவில் தண்ணீர் வர துவங்கியுள்ளது. இதனால், கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் பாதுகாப்பு கருதி, நீர்திறப்பு மேலும் அதிகரிக்கப்படும்,’ என்றனர். கிருஷ்ணகிரி அணையின் தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்வதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அணைக்கு செல்லும் பிரதான வழிகள் அடைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓசூர்: ஓசூர் அருகே ெகலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து, நேற்று காலை 1370 கனஅடியாக அதிகரித்தது. அணையின் பாதுகாப்பு கருதி, 1308 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்து வருவதால், தாழ்வான பகுதிகளில் கரையோரத்தில் மற்றும் அணையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள், தண்ணீருடன் கலந்து கெலவரப்பள்ளி அணைக்கு பாய்ந்தோடி வருகிறது. இதனால், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரில் நுரை பொங்கி வழிகிறது.
 நேற்று காலை 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக ஓசூரில் 57.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு: போச்சம்பள்ளி 39.2, தளி 25, சூளகிரி 21, பெனுகொண்டாபுரம் 20.2, கிருஷ்ணகிரி 12.1, ராயக்கோட்டை 8, அஞ்செட்டி 6.4, தேன்கனிக்கோட்டை 6, ஊத்தங்கரை 5, பாரூர் 2.4, நெடுங்கல் 1.2 என மொத்தம் 204.1 மிமீ மழை பதிவாகியிருந்தது. நேற்று காலை முதல் மாவட்டத்தில் மேகமூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மதியம் 2 மணி முதல் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags : Tenpenna river ,
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே கோடை காலத்திலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்