×

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளிக்க நடவடிக்கை படித்துறை அமைக்க தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

தர்மபுரி, ஆக.4: பிரசித்தி பெற்ற ஒகேனக்கல்லில், பவானி கூடுதுறையை போல் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளிக்கும் விதமாக, படித்துறைகள் அமைத்து தரவேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தர்மபுரியில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, தமிழகத்தின் நயாகரா என்று அழைக்கப்படும் ஒகேனக்கலுக்கு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஒகேனக்கலில் மெயினருவி, மணல்மேடு, கூட்டாறு, சினி பால்ஸ், நீர்வீழ்ச்சி, முதலைப்பண்ணை, தொங்கும் பாலம் மற்றும் ஆலம்பாடி பரிசல் துறை ஆகிய இடங்களில், சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். திரைப்பட சூட்டிங்கும் அவ்வப்போது ஒகேனக்கல்லில் நடக்கிறது.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் நம்பி, இங்கு 427 பரிசல் ஓட்டிகள், 400 சமையல் தொழிலாளர்கள், 200க்கும் மேற்பட்ட சாலையோர சிறு வியாபாரிகள், 400 மசாஜ் தொழிலாளர்கள், 60க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரிசல் கவிழ்ந்து, சுற்றுலா பயணிகள் 6 பேர் இறந்தனர். அதன் பின்னர், மாவட்ட நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும், சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்ல பரிசல் கட்டணத்தையும் அரசே நிர்ணயம் செய்தது. தற்போது, 2 ஆண்டிற்கு பிறகு கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனிடையே, தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் அருவிகளில் குளிக்கவும், காவிரியில் பரிசல் இயக்கவும் தடை விதித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளை நம்பியிருந்த 2 ஆயிரம் தொழிலாளர்கள், வேலை இழந்துள்ளனர்.

இதுகுறித்து ஒகேனக்கல் மசாஜ் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளர்கள் கூறியதாவது: ஒகேனக்கல் பகுதியில் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், சாலையோர சிறு, குறு வியாபாரிகள், தங்கும் விடுதி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என 2 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக சுற்றுலா பயணிகளை நம்பி உள்ளோம். சுற்றுலா பயணிகள் வந்தால் தான் குடும்பத்திற்கு வருவாய் கிடைக்கும். ஆண்டு முழுவதும் வருவாய் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில், குளிக்க வரிசையாக படிக்கட்டுகள் அமைத்து தந்தது போல், ஒகேனக்கல் காவிரி கரையில் தடுப்பு வேலி ஏற்படுத்தி, படித்துறை அமைக்க வேண்டும். அந்த படிக்கட்டுகளில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து குளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றில் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தாலும், சுற்றுலா பயணிகள் கரையோரத்தில் பாதுகாப்பாக அமர்ந்து குளித்து செல்ல படித்துறை அமைக்க வேண்டும். இதன் மூலம் ஒகேனக்கல் வளர்ச்சி அடையும். இதை நம்பி உள்ள தொழிலாளர்கள் வாழ்க்கைத்தரம் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Okanagan ,
× RELATED ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2,000 கன அடியாக சரிவு