×

குடும்ப ஒற்றுமை- குதூகலத்தை பறைசாற்றும் ஆடிப்பெருக்கு திருவிழா

ஈரோடு, ஆக 3:  ஈரோடு அருள் சித்தா கிளினிக் இணை நிர்வாக இயக்குனர் மூலிகை ராணி அ.கமலசங்கரி ஆடிப்பெருக்கு திருவிழா குறித்து கூறியுள்ளதாவது:  ஆடி 18, ஆடிபெருக்கு, பதினெட்டாம் பெருக்கு என்ற பல்வேறு பெயர்களில் ஈரோடு மாவட்டத்தில் காவிரி நதிக்கரைகளில் வழக்கத்தை விட இந்தாண்டு ஆடிப்பெருக்கு திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 18 என்ற எண் வெற்றியைக் குறிக்கும். அதை முன்னிட்டே காவிரி கரைகளில் 18 படிகளை அமைத்தார்கள். காவிரி இல்லையெனில் தமிழகத்திற்கு அருளாதாரமும் இல்லை, பொருளாதாரமும் இல்லை. என்பார் வாரியார் சுவாமி. அனைவரையும் வாழ வைக்கும் காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாகவே ”ஆடி பதினெட்டாம் விழா’ கொண்டாடப்படுகிறது.ஒரு காலத்தில் இந்த விழாவானது ஆடி பதினெட்டிற்கு பத்து நாட்கள் முன்பாக நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வைப்பார்கள். அது வெண்மையாக முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி என்பார்கள். ஆடி18 அன்று முளைபாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்கு செல்வர். ஆற்றங்கரையை அடைய மூன்று மணி நேரமாகும். அங்கே தூய்மையான இடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர். அவரின் முன்னால் முளைப்பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள். பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வேண்டுவார்கள். வயதான சுமங்கலி ஒருவர் அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார். சிலர் கைகளிலும் சிலர் கழுத்திலுமாக கட்டிக் கொள்வார்கள். அதன் பின் அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகமணி ஆகியவற்றை நீரில் விடுவர். நுரைத்து சுழன்று வரும் காவிரித்தாயின் வரவால் பயிர் பச்சை எல்லாம் தழைக்கப் போகின்றன. அதே சமயத்தில் சிறுவர்கள் சப்பரத்தை அழகாக அலங்கரித்து அதிகாலையில் இருந்தே வீதிகளில் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள். மாலையில் அந்த சப்பரத்தின் உள்ளே ஒரு சிறிய அகல் விளக்கை வைத்து மெதுவாக இழுத்து வருவார்கள். தெருவெங்கும் அகல் விளக்குகள் மிதந்து வருவதை போல இருக்கும் இந்த காட்சி. ஆடிப்பெருக்கு விழாவின் நிறைவாக விநாயகர் முன்னால் வைக்கப்பட்டிருந்த பச்சரிசி சர்க்கரை கலவையை எடுத்து வந்திருப்பவர்களுக்கு எல்லாம் வழங்குவார்கள். அனைவரையும் வாழ வைக்கும் காவிரி தாயை வழிபட்டு நன்றி செலுத்துதல் குடும்ப ஒற்றுமை, ஊர் ஒற்றுமை, குதூகலமான வாழ்வு ஆகியவை மக்களிடையே பரவுவதற்கு ஆடிப்பெருக்கு விழா தூண்டுகோலாக இருக்கிறது. இவ்வாறு அ.கமலசங்கரி கூறியுள்ளார்.

Tags : Family Unity- Festival ,Adipperu ,
× RELATED கொரோனா காரணமாக வழிபாடு நடத்த தடை; களை...