×

ஆடி அமாவாசை: காவிரிக் கரையில் முன்னோர் வழிபாடு

ஈரோடு, ஜூலை 30:  ஆடி மாத அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து, வழிபாடு செய்வது மிகுந்த பலனளிக்கும் என்பது ஐதீகம்.
மேலும், ஆடி அமாவாசை தினமானது பரிகார பூஜை மற்றும் தோஷ நிவர்த்தி செய்ய உகந்த நாளாகவும் கருத்தப்படுகிறது. இந்த  நிலையில், ஆடி அமாவாசை தினத்தையொட்டி, ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்  கரையில் நேற்று அதிகாலை முதல் திரளான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு  தர்பணம் செய்து, வழிபாடு நடத்தினர். மேலும், தோஷ நிவர்த்தி மற்றும் பரிகார  பூஜைகளும் மேற்கொண்டனர்.கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுமக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த  நிலையில், தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து,  ஈரோடு கருங்கல்பாளையம் காவரி ஆற்றங்கரையில் நேற்று முன்னோர் வழிபாடு  மேற்கொள்ள மக்கள் அதிக அளவில் வந்திருந்தனர். இதேபோல மாவட்டத்தின்  முக்கியப் பரிகார ஸ்தலங்களான பவானி, கொடுமுடி காவிரி ஆற்றங்கரையிலும்  திரளான மக்கள் முன்னோர் வழிபாடு நடத்தினர்.இதையொட்டி, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.இரண்டு  ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் அனுமதிக்கப்பட்டதையடுத்து, வழிபாடு நடத்த  அதிகளவில் கூடுவர் என எதிர்பார்த்த நிலையில் பவானி, கொடுமுடி காவிரி  ஆற்றங்கரையில் வழக்கத்துக்கு மாறாக மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.

பவானி: பவானி,  காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுத நதி சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் வருடந்தோறும் ஆடி அமாவாசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து  புனித நீராடுவதோடு, தங்களின் மூதாதையர்களுக்கு திதி கொடுத்தும், எள்,  தண்ணீருடன் தர்ப்பணம் கொடுத்தும், பிண்டம் வைத்தும் வழிபாடு நடத்துவது  வழக்கம். திருமண தடை, நாக தோஷம் உட்பட பல்வேறு தோஷ நிவர்த்தி  பூஜைகள் செய்வதும் வழக்கமாக உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே  கூடுதுறையில் ஏராளமான பக்தர்கள் வழிபாட்டுக்கு குவிந்தனர்.இதனால்,  பரிகார மண்டபங்கள் நிறைந்ததால், பூங்கா மற்றும் நடைபாதை, மரத்தடிகளில்  அமர்ந்து எள், தண்ணீர் வைத்தும், பிண்டம் வைத்தும் பரிகாரம் செய்தனர்.  

மேலும், காவிரியில் புனித நீராடி சங்கமேஸ்வரர், வேதநாயகி மற்றும் ஆதிகேசவப்  பெருமாளுக்கு வழிபாடு நடத்தினர். உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநில  பக்தர்கள் பெருமளவில்  வந்ததால் கூடுதுறை பகுதி  மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.மேட்டூர் அணையிலிருந்து 16 ஆயிரம்  கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டதால் காவிரியில் பக்தர்கள் புனித நீராட  பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டனர். நீச்சலில் கைதேர்ந்த தீயணைப்பு  வீரர்கள், மீனவர் சங்கப் பிரதிநிதி சந்திரன் தலைமையில் பரிசலில் தொடர்ந்து  மீனவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பவானி போலீசார், ஊர்க்காவல்  படையினர், தேசிய மாணவர் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

சாதாரண உடைகளில் போலீசார் கண்காணிப்புப் பணி மேற்கொண்டனர்.பல்லாயிரக்கணக்கானோர்  பஸ், கார், வேன், பைக்குகளில் திரண்டு வந்ததால் வாகன நிறுத்துமிடங்கள் நிறைந்து, பழைய பஸ் நிலையம், செல்லியாண்டியம்மன் கோயில்  திடல் மற்றும் ரோட்டோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தடை நீக்கப்பட்டதால் பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

Tags : Aadi Amavasai ,Kaveri ,
× RELATED காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4...