×

திண்டுக்கல் மாவட்டத்தில் 17 கண்மாய்களில் மண் அள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் ஜூலை 29: திண்டுக்கல் மாவட்டத்தில் நீர்நிலைகளில் படிந்துள்ள மண், வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளில் படிந்துள்ள மண், வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ப.விராலிப்பட்டி சிறுநாயக்கன் குளம், மல்லிநாயக்கண் குளம், வீராலிமாயன்பட்டி ஆலங்குளம் கண்மாய், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் அடியனூத்து பெரியகுளம், பெரியகோட்டை பாறைக்குளம், ம.மு.கோவிலூர் செட்டிகுளம், பாலகிருஷ்ணாபுரம் பெரியகுளம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் முசுவனூத்து கல்கோட்டை கண்மாய், சித்தர்கள்நத்தம் புதுக்குளம், பொட்டைகுளம், பச்சமலையான் கோட்டை திருமயக்கவுண்டன்பட்டி குளம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் கோனூர் சங்கன்குளம், சிங்கயகவுண்டன்குளம், அழகுபட்டி சென்னங்குளம், பெரியகுளம், மேட்டூர் குளம் மற்றும் அம்மையநயாக்கனூர் பேரூராட்சியில் அம்மையநாயக்கனூர் அன்னசமுத்திரம் கண்மாய் ஆகிய 17 நீர்நிலைகளிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக மண், வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

மனுதாரரின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் மண், வண்டல் மண் தூர்வாரி எடுத்துச் செல்லப்பட வேண்டிய கண்மாய், ஏரி, குளம் அமைந்துள்ள கிராமம் ஆகியவை, அதே வருவாய் கிராமம் அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும்.  விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண்ணை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் விவசாய நிலம் வைத்துள்ளாரா அல்லது கிராம அடங்கல் பதிவேட்டின்படி குத்தகை பெற்று விவசாயம் செய்து வருகிறார், என்பதற்கும் அவருடைய நிலத்தின் வகைப்பாடு குறித்தும், விவசாய நிலத்தின் விஸ்தீரணம் குறித்தும், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று, விண்ணப்பத்துடன் கலெக்டரிடம் சமர்பிக்க வேண்டும்.

விவசாயிகளின் நலன் கருதி மண், வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி கோரும் விண்ணப்பங்களை உடனடியாக பெற்று பரிசீலினை செய்து ஆணை பிறப்பிக்க ஏதுவாகும் வகையில் சம்மந்தப்பட்ட வட்டாரத்திலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு வரப்பெறும் விண்ணப்பங்களின் பேரில் உடனுக்குடன் பரிசீலினை செய்து தகுதியின் அடிப்படையில் விவசாய காரியங்களுக்காக மண், வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Dindigul district ,
× RELATED மிரட்டும் கோடை வெயில்; மீண்டும் சூடு...