ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் அரியலூர் வீரருக்கு ரயில் நிலையத்தில் வரவேற்பு

அரியலூர், ஜூன் 7: இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்று வெண்கலப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த அரியலூர் வீரர் கார்த்திக்கிற்கு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர். கடந்த மாதம் இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணியில் அரியலூரை சேர்ந்த ஹாக்கி வீரர் கார்த்திக் இடம் பெற்றிருந்தார். அவரின் சிறப்பான ஆட்டத்தினால் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கத்திற்கு இறுதியில் தகுதி பெற்றது. போட்டிகள் முடிந்து பதக்கத்துடன் தாயகம் திரும்பிய ஹாக்கி வீரர் கார்த்திக், நேற்று மதுரையில் இருந்து ரயில் மூலம் தனது சொந்த ஊரான அரியலூருக்கு வருகை தந்தார். கார்த்திக்கிற்கு மாவட்ட ஹாக்கி கழக நிர்வாகிகள், பசுபதி நினைவு ஹாக்கி கழக ஹாக்கி வீரர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இதனையடுத்து விளையாட்டு அரங்கில் மாவட்ட ஹாக்கி கழகம் சார்பில் ஹாக்கி வீரர் கார்த்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் குணசேகரன் வரவேற்றார். முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் யோகநாதன் முன்னிலை வகித்தார். அரியலூர் நகர திமுக செயலாளர் முருகேசன், நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று ஹாக்கி வீரர் கார்த்திற்கு சால்வை அணிவித்து தங்களது பாராட்டை தெரிவித்தனர். பின்னர் ஹாக்கி வீரர் கார்த்திக், தனது பெற்றோர் செல்வம், வளர்மதி ஆகியோருடன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: அரியலூரிலிருந்து சென்று இந்திய அணிக்காக விளையாடியது சந்தோஷமாகவும், பெருமையாகவும் உள்ளது. இந்தியா ஜப்பான், பாகிஸ்தான், இந்தோனேஷியா உள்ளிட்ட 8 நாடுகள் கலந்துகொண்ட போட்டிகளில் சூப்பர் 4ல் விளையாடி இந்தியா வெண்கல பதக்கத்தை வென்றது மிகவும் பெருமையாக உள்ளது. அடுத்து ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இடம் பெறவும், மேலும் 10 ஆண்டுகள் இந்திய ஹாக்கி அணியில் விளையாட ஆசைப்படுகிறேன். அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் செயற்கை புல் தரை மைதானம் அரசு அமைக்க முன்வர வேண்டும். அவ்வாறு அமைத்தால் என்னைப் போன்று பல ஹாக்கி இளம் வீரர்கள் உருவாக முடியும் என கோரிக்கை வைத்தார்.

Related Stories: