×

கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் கோரி முதல்வருக்கு மனு கோட்டையூர் பேரூராட்சி கூட்டத்தில் தலைவர் பேச்சு

காரைக்குடி, மே 27: காரைக்குடி  அருகே கோட்டையூர் பேரூராட்சி கூட்டம் நடந்தது. தலைவர் கார்த்திக் சோலை  தலைமை வகிக்க, செயல்அலுவலர் கவிதா, துணை தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை  வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் திலகவதி, திவ்யகுமாரி, ராஜா, லதா,  பொன்னழகு, மதி, பானுமதி, கமலா, சங்கீதா, சங்கர், வயிரவன்,கோவிந்தசாமி,  காளிஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தலைவர் பேசுகையில்,  ‘உறுப்பினர்கள் கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும்.  பேரூராட்சி உறுப்பினர்களுக்கு ஆந்திராவில் மாதம் ரூ.6000, கேரளாவில்  ரூ.8500 சம்பளமாக வழங்கப்படுகிறது. அதுபோல தமிழகத்தில் பேரூராட்சி  உறுப்பினர்களுக்கு ரூ.12 ஆயிரம் வரை மாத சம்பளம் வழங்க வேண்டும் என  வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்படுகிறது.  உள்ளாட்சியில் பெரும்பாலும் பெண் உறுப்பினர்கள் அதிகளவில் உள்ளவனர்  அவர்களுக்கு மாதசம்பளம் வழங்கும்பட்சத்தில் அவர்களிடம் தன்னம்பிக்கை  வளரும். தவிர இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக வர  ஆர்வம் காட்டுவார்கள். உறுப்பினர்களுக்கு இதுபெரும் உதவியாக இருக்கும்.  வளர்ச்சி திட்டங்களால் தமிழகத்தை இந்தியாவில் முன்னணி மாநிலமாக மாற்றி  வரும் முதல்வர் இக்கோரிக்கையும் தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து நிச்சயம்  நிறைவேற்றி தருவார் என நம்பிக்கை உள்ளது’ என்றார். கூட்டத்தில் அனைத்து  தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. குரங்கு தொல்லை கட்டுப்படுத்த வேண்டும்.  மயானத்தில் கோழி, இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்பது உள்பட  பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Tags : Kottaiyur Municipal Council ,Chief Minister ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...