×

வீரபாண்டி சித்திரை திருவிழாவில் ராட்டினம் அமைத்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாப சாவு

தேனி, மே 12: தேனி அருகே வீரபாண்டி கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி ராட்டினம் அமைக்கும் போது, மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். தேனி அருகே உப்பார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(35). இவருக்கு சுனிதா என்ற மனைவியும், விசாலினி(10), சகானா(7 மாதக்குழந்தை) என்ற மகள்களும், விசால்பாண்டி (7) என்ற மகனும் உள்ளனர். வீரபாண்டியில் தற்போது சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவிற்காக பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கவுமாரியம்மன் கோயில் அருகே ராட்டினம் அமைக்கும் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக முத்துக்குமார் பணி செய்து வந்தார்.

நேற்று மதியம் ராட்டினம் அருகே உள்ள மின்விளக்கு கவிழ்ந்த நிலையில் இருந்தது. இதை பார்த்து சரி செய்வதற்காக மின்விளக்கு அமைக்கப்பட்ட கம்பியின் மீது முத்துக்குமார் ஏறினார். இதில் சரியாக பொருத்தப்படாமல் இருந்த வயரின் மூலம் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்துக்குமார் பலத்த காயம் அடைந்தார். இதனைக் கண்ட அக்கம்,பக்கத்தினர் அவரை மீட்டு வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, ஏற்கனவே முத்துக்குமார் இறந்தது உறுதியானது. இதனையடுத்து முத்துக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Veerapandi Chithirai festival ,
× RELATED நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1...