×

வெளிமாநில குற்றவாளிகள், கடத்தல் சம்பவங்களை தடுக்க ரூ.9 கோடியில் ஒருங்கிணைந்த சுங்கச்சாவடி கண்காணிப்பு மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை, தீயணைப்புதுறை மற்றும் மீட்புப் பணிகள் துறை மானிய கோரிக்கை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:  வெளிமாநில குற்றவாளிகள் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த உதவிடும் வகையில் தேசிய அளவில் ஒரு முன்னோடி திட்டமாக ஒருங்கிணைந்த சுங்கச்சாவடி கண்காணிப்பு மையம் ₹9 கோடி செலவில் அமைக்கப்படும்.

* ஒவ்வொரு மண்டலத்திற்கும் நடமாடும் ஆளில்லா விமான அலகு ₹1.20 கோடி செலவில் விரிவுபடுத்தப்படும்.
* சென்னை பெருநகர காவலில் மேலும் 3 வழித்தடங்களில் ₹10.50 கோடி செலவில் போக்குவரத்து ஒழுங்குமுறை கண்காணிப்பு மண்டலம் அமைக்கப்படும்.
* இளம் மற்றும் முதல் முறை குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ‘பறவை’ என்னும் முன்னோடி திட்டம் ₹1 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
* இணையவழி குற்றங்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க ‘இணைய எச்சரிக்கை செயலி’ மற்றும் இணைய பாதுகாப்பு முகப்பு செயலிகள் ₹30 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
* சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க ₹33 லட்சம் செலவில் ‘பருந்து’ என்ற செயலி உருவாக்கப்படும்.
* காணாமல் போன மற்றும் திருட்டு வாகனங்களை கண்காணித்து அடையாளம் காணும் விதமாக ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு செயலி ₹2 கோடி செலவில் உருவாக்கப்படும்.
* மதுவிலக்கு அமலாக்கப்பிரிவை போதைபொருள் நுண்ணறிவு பிரிவுடன் இணைத்து போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவாக மறுசீரமைக்கப்படும்.
* சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி கல்லூரி, வண்டலூர் அருகே உள்ள உயர் காவல் பயிற்சியக வளாகத்திற்கு மாற்றப்படும்.
* காவல் துறையில் உள்ள தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் அனைத்து ஆளினர்களுக்கும் இடர்படி தொகை உயர்த்தி வழங்கப்படும். இதற்கான தொடர் செலவினம் ₹63 லட்சமாகும். திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு ஆளுநர்களுக்கு 5 சதவீதம் சிறப்பு ஊதியம் வழங்கப்படும். இதற்கான தொடர் செலவினம் ₹1.16 கோடி ஆகும்.
* போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் காவலர்கள், அதிகாரிகளை ஊக்குவிக்க முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும்.
* காவலர்களின் நல மேம்பாட்டிற்காக மகிழ்ச்சி என்ற செயல்திட்டம் ₹53 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.
* சென்னை பெருநகரில் பணிபுரியும் காவலர்களின் உடல் நலன் மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படும். இதற்கான செலவீனம் ₹46 லட்சமாகும்.
* பெண் காவலர்களுக்கான பணி வாழ்க்கை சமநிலை குறித்த பயிற்சி ‘ஆனந்தம்’ என்கிற திட்டத்தின் மூலம் ₹34 லட்சம் செலவில் வழங்கப்படும்.
* சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சர்வதேச தரத்திலான செயற்கை கூடைப்பந்து மைதானம் ₹2 கோடி செலவில் அமைக்கப்படும்.
* காவல் புகைப்படக் கலைஞர் பிரிவு மறுசீரமைக்கப்படும். காவல்நிலைய காவல் ஆய்வாளர்களுக்கான 200 ஜீப்புகளுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வழங்கப்படும்.
* மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள காவல் நிலையங்களுக்கான 20 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் வாங்க ₹2 கோடி வழங்கப்படும்.
* 139 நகராட்சிகள் உள்ள 278 காவல் நிலையங்களுக்கும் தலா ஒரு இருசக்கர ரோந்து வாகனம் வழங்கப்படும். நுண்ணறிவுப் பிரிவின் நான்கு அலகுகளில் களப்பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு 200 இருசக்கர வாகனங்கள்  வழங்கப்படும்.
* முதலமைச்சரின் தனிப்பாதுகாப்பு பிரிவிற்கு உடனடியாக ஜாமர் கருவி பொருத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் ₹4.48 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்.
* சென்னையில் சிசிடிவி கேமராக்கள் ₹2.50 கோடி செலவில் பராமரிக்கப்படும். 10 ஆண்டுகளுக்கு மேலான 68 போக்குவரத்து சமிக்சை கம்பங்களை மாற்றுதல் மற்றும் 244 போக்குவரத்து சமிக்சை கம்பங்களை பராமரிக்க ₹9 கோடி செலவிடப்படும்.
* 312 சாலை சந்திப்புகளில் தொலைதூர போக்குவரத்து சமிக்சை கட்டுப்பாடு கம்பங்கள் ₹50 லட்சம் செலவில் நிறுவப்படும்.
* சென்னை பெருநகர காவலில் கடற்கரை ரோந்து பணிக்கு புதிய கடற்கரை ரோந்து வாகனங்கள் ₹80 லட்சம் செலவில் வாங்கப்படும். மாநில காவல் தலைமையகத்தில் ₹3 கோடி செலவில் சமூக ஊடக மையம் அமைக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, ஆவடி, தாம்பரத்தில் புதிதாக குற்ற புலனாய்வு துறை : செங்கல்பட்டு, தென்காசி  மாவட்டங்களிலும், திருப்பூர் மாநகரிலும், ஆவடி மற்றும் தாம்பரம்  மாநகராட்சியிலும் புதிதாக தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை ₹8  கோடியில் உருவாக்கப்படும். சென்னை காவல் ஆணையரகத்தில் இரண்டு காவல் துணை ஆணையர்  பதவிகளும், இரண்டு காவல் உதவி ஆணையர் பதவிகளும் உருவாக்கப்படும். சேலம், நெல்லை, திருப்பூர் மற்றும் திருச்சி மாநகரங்களில் காவல் துணை ஆணையர்  (தலைமையிடம்) பதவிகள் உருவாக்கப்படும். சிலை திருட்டு தடுப்புப் பிரிவினர்  கைப்பற்றிய சிலைகளை ஆய்வு செய்ய ஒரு காப்பாளர் பதவி ₹6 லட்சம் தொடர் செலவினத்தில் உருவாக்கப்படும். மாநிலத்திலுள்ள 11 காவல் சரகங்களிலும்  தலா ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் பதவியிடம் ₹3.70 கோடி செலவில்  உருவாக்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலகம் கட்ட  ₹15.40 கோடி வழங்கப்படும். கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகத்திற்கு  ₹3.16 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும். காவலர் பயிற்சி கல்லூரி  வளாகத்தில் ₹20 கோடி செலவினத்தில் தனியாக புதிய நிர்வாக கட்டிடம்  கட்டப்படும். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் காவலர்கள்  தங்குவதற்கு ₹12 கோடியில் பாளையம் கட்டப்படும். சேவூரில் தமிழ்நாடு  சிறப்பு காவற்படையின் 15வது அணிக்கு ₹5.7 கோடியில் நிர்வாக அலுவலக  கட்டிடம் கட்டப்படும். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த உயர்  நீதிமன்றக் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் கட்டப்படும்.

Tags : Integrated Customs Monitoring Center ,Chief Minister ,MK Stalin ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...