×

வஉசி உயிரியல் பூங்காவிற்கான அங்கீகாரத்தை மீண்டும் பெற கையெழுத்து இயக்கம் நடத்த திட்டம்

கோவை, மே 3: கோவை மக்களின் மிக முக்கிய பொழுதுபோக்கு பூங்காவாக கோவை மாநகராட்சி வஉசி உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த 1965-ம் ஆண்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டது. ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 532 விலங்கினங்கள் வரை உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் 300 முதல் 350 பேர் வார நாட்களிலும், 1,500 முதல் 2,000 பேர் வரை விடுமுறை நாட்களிலும் வந்து செல்கின்றனர்.

பூங்கா மற்றும் விலங்கினங்களின் பராமரிப்பு விவகாரத்தில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாடு துறையின் கீழ் செயல்படும் ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையம் கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை கடந்த ஜனவரி மாதம் ரத்து செய்தது.  இந்நிலையில் பூங்காவிற்கான அங்கீகாரத்தை மீண்டும் பெற மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

கோவை மாநகர் மக்களின் முக்கியமான பொழுதுபோக்கு பூங்காவாக வஉசி பூங்கா செயல்பட்டது. பூங்காவின் அங்கீகாரத்தை மீண்டும் பெற வேண்டும் என மாநகராட்சி கமிஷனரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மூலம் கையெழுத்து இயக்கம் நடத்தி வஉசி பூங்கா மீண்டும் மக்களுக்காக திறக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கையெழுத்தினை டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு நேரடியாக கொண்டு சென்று கொடுக்க உள்ளேன். விரைவில் வஉசி பூங்காவுக்காக கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்’’ என்றார்.

Tags : Wausau Zoo ,
× RELATED போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில்...