×

திருவூர் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கத்தை போதிக்க பள்ளி வளாகத்திலேயே முடி திருத்தம்

திருவள்ளூர், ஏப்.28: திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கத்தை போதிக்கும் விதமாக பள்ளி வளாகத்திலேயே முடி திருத்தம் செய்யப்பட்டது. திருவள்ளூர் ஒன்றியம், திருவூரில் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு திருவூர்,தொழுவூர் குப்பம், திருவூர் ஹவுசிங் போர்டு, ராம்நகர், செவ்வாப்பேட்டை, குமரன் நகர்,மகாலட்சுமி நகர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.  இப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கத்தையும் போதிக்கும் விதமாக அனைவரும் சீராக முடிதிருத்தம் செய்து, நல்ல முறையில் சீருடை அணிந்து வரவேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள். இருப்பினும் மாணவர்கள் அதனை பின்பற்றாமல் இருந்து வந்துள்ளனர்.இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும்  மாணவ மாணவியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தனர். இதில் மாணவர்கள் அனைவரும் ஒழுக்கத்தை முறையாக கடைபிடிக்கும் விதமாக தங்களது  தலை முடிகளை சீராக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இருப்பினும் மாணவர்கள் சிலர் முடி திருத்தம் செய்யாமல் இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்று பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜம்மாள் தலைமையில், பள்ளியின் ஓவிய ஆசிரியர் சா.அருணன் ஆகியோர் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முடி திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.அதை தொடர்ந்து முடிதிருத்தும் தொழிலாளியை பள்ளி வளாகத்திற்குள் அழைத்து வந்து 45 மாணவர்களை ஒன்றன் பின் ஒன்றாக அமரவைத்து அனைவருக்கும் சீராக முடிதிருத்தம் செய்தனர். கல்வியுடன் ஒழுக்கத்தைப் போதிக்கும் இடமாக முடிதிருத்தம் செய்யப்பட்டதாக ஓவிய ஆசிரியர் சா.அருணன் தெரிவித்தார்.

Tags : Thiruvur Government High School ,
× RELATED பொன்னேரி அரசு கல்லூரி அருகே ஜம்பு சர்க்கஸ் தொடக்கம்