×

மேல்மருவத்தூர் ஊராட்சியில் திட, திரவ கழிவு மேலாண்மை பணிகள்: ஒன்றிய அமைச்சக செயலர் ஆய்வு

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஊராட்சியில் திடக்கழிவு மற்றும் திரவ கழிவு மேலாண்மை பணிகளை ஒன்றிய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக செயலர் மதன்லால் பார்வையிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் மேல்மருவத்தூர் ஊராட்சியில், தூய்மை பாரத திட்டத்தின் கீழ் செயல்படும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடுகள் சிறப்பான முறையில், செயல்படுத்துவதால் முன்மாதிரி கிராமமாக திகழ்கிறது. இந்த திட்டப்பணிகளை மத்திய, மாநில அதிகாரிகள் ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் அகத்தியன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் செந்தில்குமார் வரவேற்றார். டெல்லி ஒன்றிய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக செயலர் மதன்லால் கலந்து கொண்டு மன்ற உறுப்பினர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரிடம் கலந்துரையாடினார்.

தொடர்ந்து ஊராட்சியில் சிறப்பாக செயல்படும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் திரவ கழிவு மேலாண்மை பணிகள், தனிநபர் கழிப்பறை, உறிஞ்சி குழி, வீட்டு தோட்டம், நுண்ணுயிர் மேலாண்மை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அங்கு மரக்கன்று நட்டார். நிகழ்ச்சியில் முழு சுகாதார மாநில ஒருங்கிணைப்பாளர் வினோத், உதவி திட்ட அலுவலர் அம்பிகாபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்தாமூர் வீரமுத்து, ஞானசேகரன், அச்சிறுப்பாக்கம் சசிகலா, ஒன்றிய பொறியாளர் கனிமொழி, வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Melmaruvathur Panchayat ,Union ,Ministry ,
× RELATED டெல்லியில் ஒன்றிய அரசு அலுவலக கட்டடத்தில் தீ விபத்து!!