×

ஊட்டி - கோத்தகிரி சாலையில் இடிந்து விழுந்த தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?

ஊட்டி, ஏப்.14: ஊட்டி - கோத்தகிரி சாலையில் மைனலை சந்திப்பு அருகே சாலையோர தடுப்புச்சுவர் இடிந்து இரும்பு தடுப்புகள் அந்தரத்தில் தொங்கிய நிலையில் காட்சியளிக்கிறது. ஓராண்டிற்கும் மேலாக சரி செய்யப்படாத அவலம் நீடிக்கிறது. நீலகிரி மாவட்டத்தை மற்ற மாவட்டங்களுடன் இணைக்கும் சாலைகளில் ஒன்றாக ஊட்டி - கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. மழை காலங்கள் மற்றும் கோடை சீசன் சமயங்களில் இச்சாலை மாற்று பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சாலையில் குறுகலான பல இடங்களில் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த ஆண்டு பருவமழையின் போது இச்சாலையில் மைனலை சந்திப்பு அருகே சாலையோர சுமார் 10 அடி உயர தடுப்புச்சுவர் இடிந்து கீழ்புறமுள்ள தேயிலை தோட்டத்திற்குள் சரிந்தது. இப்பகுதியில் உள்ள இரும்பு தடுப்பானது அந்தரத்தில் தொங்கிய நிலையில் உள்ளது. இப்பகுதியில் விபத்து ஏற்படாத வண்ணம் தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள தடுப்புச்சுவரும் பலமிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

உடனடியாக சீரமைக்காத பட்சத்தில் சாலை சேதமடையும் அபாயம் உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இதே நிலை நீடிக்கும் நிலையில், நெடுஞ்சாலைத்துறை இதனை சீரமைக்காமல் அலட்சியமாகவே உள்ளது. மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சாலையோரம் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சேதமடைந்த தடுப்புச்சுவருக்கு பதிலாக புதிதாக தடுப்புச்சுவர் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தரமான முறையில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Ooty-Kotagiri road ,
× RELATED ஊட்டி- கோத்தகிரி செல்லும் சாலையில்...