×

பூம்பூம் மாட்டுக்காரர்கள் இலவச வீட்டுமனை கேட்டு மனு

சேலம், ஏப்.5: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது. தலைவாசல் அருகேயுள்ள மும்முடியில் அரசு புறம்போக்கு நிலத்தில் சாமியானா கொண்டு கொட்டகை அமைத்து வசித்து வரும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் 20க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில், ‘‘மும்முடியில் கொட்டகை அமைத்து 36 குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு வசிக்க இடமில்லை. அதனால், இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, அந்த இடத்திற்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்,’’ எனக்கூறியிருந்தனர்.

இதேபோல், இடைப்பாடியை சேர்ந்த புகையிலை பயிரிடும் விவசாயிகள் மற்றும் புகையிலை வியாபாரிகள் 30க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர். அதில், இடைப்பாடி பகுதியில் தாதாபுரம், வேம்பனேரி, சமுத்திரம், கோரணம்பட்டி, செட்டிமாங்குறிச்சி, இருப்பாளி, வெள்ளரிவெள்ளி, ஆலச்சம்பாளையம், குஞ்சாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 1,500 ஏக்கர் பரப்பளவில் புகையிலை பயிரிட்டு வருகிறோம். இங்கு விளைந்த புகையிலையை வியாபாரிகளின் குடோனில் பாதுகாத்து வைத்து, விற்பனை செய்து, வருவாய் ஈட்டி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அந்த புகையிலையை பறிமுதல் செய்துவிட்டனர். திண்டுக்கல் வேடச்சந்தூரில் உள்ள மத்திய புகையிலை ஆராய்ச்சி மையத்தில் முறையாக விதையை பெற்று, பணப்பயிராக இதனை பயிரிட்டு வரும் நிலையில், தற்போது தடை செய்யப்பட்ட பொருள் என பறிமுதல் செய்திருப்பது வேதனையை தருகிறது. அதனால், அந்த புகையிலையை விடுவித்து, முறையாக விவசாயம் செய்திட வழிவகை செய்து, எங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும், எனக்கூறியிருந்தனர்.

Tags : Boom Boom Cattle ,
× RELATED ஒரு கிலோ பாக்கு ₹900க்கு விற்பனை