கரூர், மார்ச்30: கரூர் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை கொள்முதல் செய்ய வசதியாக பதிவு செய்த அனைத்து வேளாண் குடும்பங்களும் பயன்பெறும் வகையில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ. 6ஆயிரம் என மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி மாற்றம் மூலமாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.கரூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 77ஆயிரத்து 448 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுவரை மொத்த 10 தவணை உதவித்தொகைகள் வரப்பெற்றுள்ளது.தற்சமயம், மத்திய அரசால், வழங்கப்பட்ட திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் தற்போது உதவித்தொகை விடுவிப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, உதவித்தொகை இதுவரை வங்கி கணக்கிற்கு நேரடியாக நிதி விடுவிக்கப்பட்டு வந்த நிலையில், இனி பிஎம் கிசான் உதவித் தொகையானது ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்படும். எனவே, இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் 11வது தவணை ( ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை) தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணோடு இணைப்பது அவசியமாகும்.கரூர் மாவட்டத்தில் இதுநாள் வரை மொத்தம் 13,581 பிஎம் கிஷான் திட்ட பயனாளிகள் ஆதார் எண்ணை தங்களது வங்கி கணக்கு எண்ணோடு இணைக்கப்படவில்லை. எனவே, இதுவரை இணைக்காத விவசாயிகள் உடனடியாக தங்கள் வங்கி கிளைக்கு ஆதார் மற்றும் வங்கி பாஸ் புத்தகத்தினை எடுத்துச் சென்று இணைத்துக் கொள்ள வேண்டும். பிஎம் கிஷான் திட்ட பயனாளிகள் குறிப்பிட்டவாறு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே அடுத்த 11வது தவணை உதவித்தொகை கிடைக்கும்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
