×

பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானையும் சேர்த்து வழங்க வேண்டும்

மொடக்குறிச்சி, டிச.26:  நலிந்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் மண்பானையையும் சேர்த்து வழங்க வேண்டும் என அரசுக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் வருவதையொட்டி பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் மொடக்குறிச்சி சுற்றுவட்டார மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மொடக்குறிச்சி, அரச்சலூர், அவல்பூந்துறை, முகாசி அனுமன்பள்ளி, 46புதூர், லக்காபுரம் சிவகிரி, தெற்கு பொன்னம்பாளையம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பானை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இகுதுறித்து மண்பானை தயாரிக்கும் தொழிலாளி கனகராஜ் கூறும்போது; ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானைகளை வழக்கத்திற்கு அதிகமாக உற்பத்தி செய்து வருகிறோம். தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பானை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது பொங்கலை சில்வர், பித்தளை பானைகளில் வைத்து விடுகின்றனர். இதனால் மண்பாண்ட பொருட்கள் விற்பனை ஆகாமல் போய்விடுகிறது. இதனால் இத்தொழிலில் போதுமான வருமானம் இல்லாமல் இளைஞர்கள் வேறு வேலைகளுக்கு சென்று விடுகின்றனர்.

மேலும் காலங்காலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் மட்டுமே செய்து வருகின்றனர். எனவே இத்தொழிலை நம்பி உள்ள மண்பாண்ட கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு மண்பானைகளை கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளில் வழங்கினால் இத்தொழிலை நம்பி உள்ள ஒரு லட்த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வாழ்வாதாரம் மேம்படும் எனக் கூறினார்.

Tags : Manpanai ,Pongal ,
× RELATED காரையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா