×

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் 150 நடைபாதை கடைகள் அகற்றம்: பிளாஸ்டிக் விற்ற 4 கடைகளுக்கு சீல்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக வந்த புகாரின் பேரில்,  மார்க்கெட் நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி தலைமையில், சிஎம்டிஏ அதிகாரிகள் நேற்று அதிகாலை திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 4 கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது தெரியவந்தது. அங்கிருந்து 150 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, அந்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என சிஎம்டிஏ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட் செல்லும் பிரதான சாலையின் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை சிஎம்டிஏ அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த பெண் வியாபாரி ஒருவர், கோயம்பேடு மார்க்கெட் காவலாளியை தாக்கினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.  தகவலறிந்து, 100க்கும் மேற்பட்ட  கோயம்பேடு போலீசார், அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கிருந்து 150க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டது. தடையை மீறி நடைபாதையில் கடை நடத்தியவர்களுக்கு ₹20,000 அபராதம் விதிக்கப்பட்டது.


Tags : Coimbatore Market ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி...