×

முதலூர் ஊரணி அருகே பராமரிப்பின்றி உருக்குலைந்த தரைநிலைப் பாலம்

சாத்தான்குளம், மார்ச் 23: முதலூர் ஊரணி அருகே பராமரிப்பின்றி உருக்குலைந்த தரைநிலைப் பாலம் விரைவில் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். சாத்தான்குளம் யூனியன், முதலூர் ஊராட்சிக்கு உட்பட்ட  முதலூரில் இருந்து அன்பின்நகரம்  கிராமத்துக்கு செல்லும் வழியில் ஊரணி உள்ளது. இந்த ஊரணி இடையே சிறிய பாலம்  மற்றும் தரைநிலை பாலமும்  உள்ளது. இந்த பாலம் வழியாக பள்ளி மாணவ, மாணவிகள்,  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் சென்று திரும்புகின்றனர். இந்த ஊரணி  பாலத்துக்கு அருகேயுள்ள தரைநிலை பாலம்  கடந்த 3ஆண்டுகளுக்கு மேலாகி பராமரிப்பின்றி உருக்குலைந்துள்ளது. இதில் கற்கள் கரடு முரடாக காணப்படுவதால் அன்பின்  நகரத்தில் இருந்து முதலூர் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ, மாணவிகள்  மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

மிகவும் சேதமடைந்துள்ள அபாய நிலையில் உள்ள இந்த பாலம் குறித்து கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை  பலனில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், இப்பாலம் விரைவில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். எனவே, இனியும் தாமதமின்றி இந்த தரைநிலை பாலத்தை சீரமைக்க துரித நடவடிக்கை  எடுக்க வேண்டும் என முதலூர் டேனியல்  உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : Mudalur Urani ,
× RELATED காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி...