×

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கம்பம், மார்ச் 19: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, கம்பம், கூடலூர் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கூடலூர் நகராட்சி 21வது வார்டில் லோயர்கேம்பை அடுத்து, குமுளி மலைச்சாலையில் வழிவிடும் முருகன் கோயில் உள்ளது. இங்கு நேற்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. காலை முதல் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். கோயில் வனாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. கம்பம், கூடலூர் மற்றும் கிராம பகுதிகளில் இருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி, பாதயாத்திரையாக வந்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

இதேபோல, கூடலூர் கூடல் சுந்தரவேலவர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, காலையிலே கணபதி ஹோமத்துடன் தொடங்கி சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகளில் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.சுருளி மலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை மற்றும் இருமூர்த்தி திருவிழா நடைபெற்றது. காலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் தொடங்கி,  ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கம்பத்தில் கம்பராயப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள சண்முக சுப்பிரமணியசாமி கோயில், சுருளி வேலப்பர் கோவில், கம்பம் கௌமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பாலமுருகன் கோயில், ஆதிசக்தி விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான ஆண் பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர், அன்னதானம் நடைபெற்றது.

Tags : Murugan ,Panguni Uttara Festival ,Kolagalam ,Balkudam ,
× RELATED விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம்