×

சேரங்கோடு ஊராட்சி மன்ற கூட்டத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க ரூ.1.40 கோடிக்கு ஒப்பந்தம்

பந்தலூர், மார்ச் 10:  சேரங்கோடு ஊராட்சி மன்ற கூட்டத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கு ஒப்பந்தம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி மன்ற கூட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். சேரங்கோடு ஊராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் லில்லி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் சஜீத் தலைமை வகித்தார். கூடலூர் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில்  வனத்துறை சார்பில் சேரம்பாடி வனச்சரகம் ஏசிஎப் சர்மிளி மற்றும் வனத்துறையினர் கலந்துகொண்டனர்.

குடியிருப்பு பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்றுவதற்கு வனத்துறை அனுமதி அளிக்கவேண்டும்.  பல ஆண்டுகளாக வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் மக்கள் வசித்துவருகிறார்கள். இவர்கள் பயன்படுத்தி வரும் சாலைகளை சீரமைக்க வனத்துறையினரின்  தடைகள்  உள்ளது.இதனை  முறைப்படுத்தவேண்டும்  என்பன உள்ளிட்ட  பல்வேறு பிரச்னைகள் குறித்து தலைவர் லில்லி மற்றும் துணைத்தலைவர் சந்திரபோஸ் ஆகியோர் தெரிவித்தனர்.

இதற்கு  ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து  வார்டு கவுன்சிலர்கள் தங்களுடைய பகுதிகளில் உள்ள குடிநீர், நடைபாதை, கழிவுநீர் கால்வாய் அமைத்தல், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். அனைத்து பிரச்னைகளையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் மற்றும் தலைவர் ஆகியோர் தெரிவித்தனர்.

செயலாளர் சஜீத் கூறுகையில், சேரங்கோடு, எருமாடு, கொளப்பள்ளி பேக்டரிமட்டம், மணல்வயல் உள்ளிட்ட பல பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கு ஒப்பந்தம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார். துணைத்தலைவர் சந்திரபோஸ் நன்றி கூறினார்.

Tags : Serangode ,Panchayat ,Council ,
× RELATED ஒப்பந்ததாரரிடம் ₹15,000 லஞ்சம் ஊராட்சி மன்ற தலைவர் கைது: பாஜவை சேர்ந்தவர்