×

பழங்குடியினர் அருங்காட்சியகத்தை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்

ஊட்டி,மார்ச்8: ஊட்டி முத்தோரை பாலாடாவில் உள்ள பழங்குடியினர் அருங்காட்சியகத்தை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முத்தோரை பாலாடா பகுதியில் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் அருங்காட்சியகத்தை புதுப்பிக்கும் பணி நடந்தது. ரூ.45 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு நீலகிரியில் வாழ கூடிய தோடர், கோத்தர், குரும்பர், இருளர், காட்டுநாயக்கர், பனியர் பழங்குடியின மக்களின் ஆண், பெண்களின் சிலைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. மாதிரி சிலைகள் கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டு விளக்கு வெளிச்சத்தில் அழகாக பிரதிபலிக்கிறது.

மேலும் பழங்குடியின மக்களின் மாதிரி வீடுகள், கோவில்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய உணவு தானியங்கள், மருத்துவ மூலிகை தாவரங்கள், விவசாய பொருட்கள் போன்றவையும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி வாழ் பழங்குடியின மக்களின் காலாச்சாரம் குறித்து ஒலி ஒளி வடிவில் திரையிடப்படுகிறது. இதுதவிர தமிழகத்தில் வாழும் 36 வகையான பழங்குடியின மக்களின் புகைப்படங்கள், புகைப்படங்கள், சுவர் ஓவியங்கள் இடம்பெற்று உள்ளன. தற்போது இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று அங்குள்ள மாதிரி சிலைகளை பார்வையிட்டு பழங்குடியினரின் வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டு செல்கிறார்கள். பழங்குடியினர் அருங்காட்சியகத்தை அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து பார்த்து செல்ல வசதியாக சுற்றுலாத்துறை மூலமாகவும் தகவல்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags : Tribal Museum ,
× RELATED பழங்குடியினர் அருங்காட்சியகத்தில்...