கழுகுமலை: மார்ச் 5: கழுகுமலை பேரூராட்சியில் உள்ள 15வார்டுகளுக்கு நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 12, அதிமுக 2, சுயேட்சை -1 என வெற்றி பெற்றது. பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி திமுக பேரூராட்சியை கைப்பற்றிய நிலையில் நேற்று தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் 12வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட அருணா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2 முறை துணை தலைவராகவும் தற்போது தலைவராகவும் பதவி ஏற்றுள்ளார்.
மதியம் துணைதலைவருக்கான தேர்தல் நடந்தது. இதில் 15வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்பிரமணியன் போட்டியின்றி துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுப்பிரமணியனும் 2முறை பேரூராட்சி தலைவராக இருந்துள்ளார். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அருணாவும், துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுப்பிரமணியனும் கணவன், மனைவி ஆவர். சுப்பிரமணியன் திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளராக உள்ளார்.
தம்பதியினர் வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுகவினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். துணைதலைவர் சுப்பிரமணியன் கூறுகையில் ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி மற்றும் மக்கள் திட்டங்கள் காரணமாக ஒட்டுமொத்த மக்களும் தங்களை வெற்றி பெற வைத்துள்ளார்கள். கழுகுமலை பேரூராட்சிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என்றார்.