×

சத்தி, பவானி நகராட்சியில் முதல் முறையாக பெண் தலைவர்கள் பதவியேற்றனர்

சத்தியமங்கலம், மார்ச் 5: தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் திமுக 18 வார்டுகளை கைப்பற்றியது.
திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் நேற்று காலை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில், 5வது வார்டில் வென்ற திமுக நகர பொறுப்பாளர் ஜானகி ராமசாமி நகராட்சி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். மொத்தம் 27 கவுன்சிலர்களில் 23 கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர். நகராட்சித் தலைவர் பதவிக்கு ஜானகி ராமசாமி ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் நகராட்சித் தலைவர் ஜானகிராமசாமியை அவரது இருக்கைக்கு அழைத்து சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி அமர வைத்தார். இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் மற்றும் திமுக பிரமுகர்கள் ஜானகிராமசாமிக்கு பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர். துணைத்தலைவர் தேர்தலில் 2வது வார்டு கவுன்சிலர் நடராஜ் துணைத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். சத்தியமங்கலம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதிலிருந்து இதுவரையிலும் ஆண்களே நகராட்சி தலைவர்களாக பதவி வகித்து வந்தனர்.

தற்போது சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால் முதல் முறையாக திமுக நகர பொறுப்பாளர் ஜானகி ராமசாமி முதல் பெண் நகராட்சி தலைவராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக 11 வார்டுகளிலும், காங்கிரஸ் 2, அதிமுக ஒரு வார்டிலும், சுயேட்சை 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இதில், 12வது வார்டில் திமுக சார்பில் வென்ற கவுன்சிலர் ஜனார்த்தனன் நகராட்சி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். நகராட்சித் தலைவர் பதவிக்கு ஜனார்த்தனன் ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக நகராட்சி ஆணையாளர் சக்திவேல் அறிவித்தார்.

அதேபோல், மதியம் நடந்த துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் 1வது வார்டில் வெற்றிபெற்ற திமுக நகர செயலாளர் சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பவானி : பவானி நகராட்சித் தலைவராக திமுக சார்பில் சிந்தூரி இளங்கோவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பவானி நகராட்சியில் 27 வார்டுகளில் திமுக 19, அதிமுக 5, இந்திய கம்யூ., 2 மற்றும் சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சிந்தூரி இளங்கோவன், போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். திமுக கூட்டணியில் துணைத்தலைவர் பதவி இந்திய கம்யூ.,க்கு ஒதுக்கப்பட்ட நிலையில் 11வது வார்டில் வென்ற மணி மனுத்தாக்கல் செய்தார். 27-வது வார்டியில் சுயேட்சையாக வெற்றி பெற்ற ராஜா போட்டியிட்டார். தொடர்ந்து நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் மணி, 19 வாக்குகளும், ராஜா 8 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து, மணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இவர்களுக்கு, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், இந்திய கம்யூ., ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன், திமுக நகரச் செயலாளர் நாகராஜன், இந்திய கம்யூ., நகரச் செயலாளர் பாலமுருகன், காங்கிரஸ் நகரத் தலைவர் கதிர்வேல், நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் இந்திரஜித் மற்றும் திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். பவானி நகராட்சியை திமுக முதல்முறையாகக் கைப்பற்றியதைத் தொடர்ந்து திமுகவினர் நகரில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஊர்வலமாகச் சென்றனர்.

Tags : Satti, Bhavani municipality ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...