ஈரோடு மாநகராட்சியில் “மக்களை தேடி மேயர்” திட்டம்

ஈரோடு, மார்ச் 5: ஈரோடு, மார்ச் 5: ஈரோடு மாநகராட்சி மேயராக நாகரத்தினம், துணை மேயராக செல்வராஜ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஈரோடு  மாநகராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் திமுக 43 வார்டுகளில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்  3, மதிமுக, கொமதேக தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 6,  சுயேட்சைகள் 6 பேர் வெற்றி பெற்றனர்.

கடந்த 2ம் தேதி கவுன்சிலர்கள்  பதவியேற்பு நடைபெற்ற நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி  நேற்று மேயர், துணை மேயர் தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி வளாகத்திற்குள்  கவுன்சிலர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கூட்டரங்கில் கவுன்சிலர்கள்  கூடியதும், மேயர் தேர்தல் அறிவிப்பினை மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார்  வெளியிட்டார்.

மேயர் தேர்தலில் போட்டியிட விரும்பும் கவுன்சிலர்கள்  வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்தார். கவுன்சிலர்கள் வாக்களிக்க  வசதியாக வாக்குபெட்டி தயாராக வைக்கப்பட்டிருந்தது. 9.30 மணி முதல் 10 மணி  வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. அப்போது, திமுக  அதிகாரப்பூர்வ வேட்பாளரான 50வது வார்டு கவுன்சிலர் நாகரத்தினத்தின்  வேட்புமனுவை திமுக கவுன்சிலர்கள் குறிஞ்சி தண்டபாணி, நந்தகோபு ஆகியோர்  பரிந்துரை செய்து தாக்கல் செய்தனர்.

10 மணி வரை வேறு யாரும் வேட்புமனு  தாக்கல் செய்ய முன்வராததால் மேயராக நாகரத்தினம் போட்டியின்றி தேர்வு  செய்யப்படுவதாக கமிஷனர் சிவக்குமார் அறிவித்தார். அதன்பின், மேயருக்கான அங்கி  மற்றும் வெள்ளி செங்கோல் வழங்கிய கமிஷனர் சிவக்குமார், மேயர் இருக்கையில்  அமரவைத்தார். இதையடுத்து, புதிய மேயர் நாகரத்தினத்திற்கு கவுன்சிலர்கள்,  மாநகராட்சி அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து  வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேயர்,  துணை மேயர் தேர்தலுக்குப் பின், பதவியேற்றுக் கொண்ட இருவரும், பன்னீர்  செல்வம் பூங்காவில் உள்ள பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர் ஆகியோரின்  சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது குறித்து புதிய மேயர் நாகரத்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு மாநகராட்சி மேயராக தேர்வு  செய்யப்பட்டுள்ளேன். இந்த வாய்ப்பினை வழங்கிய தமிழக முதல்வர், அமைச்சர்  முத்துசாமி, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நன்றியை  தெரிவித்து கொள்கிறேன்.

 உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத  காரணத்தால் மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து  வந்தனர். இன்னும் சில மாதங்களில் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும்.  ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிகள் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் போன்ற  மக்கள் பயனுள்ள திட்டங்கள் நிலுவையில் உள்ளன. பணிகள் முழுமையாக  முடிக்கப்பட்டு மாநகர் முழுவதும் தார் சாலைகள் விரைவில் அமைக்கப்படும்.  மாநகராட்சி சார்பில் அமைந்துள்ள சமுதாயக் கூடங்கள் சரி செய்யப்பட்டு  ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி கொண்டு வரப்படும். மேலும், புதிய  சமுதாய கூடங்கள் கட்டப்படும்.

‘மக்களை தேடி மேயர்’ என்ற திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டு உங்கள் பகுதிக்கு மாதத்திற்கு ஒரு முறை நேரடியாக  வந்து பொதுமக்களிடம் குறைகள் கேட்கப்படும். இவ்வாறு மேயர் நாகரத்தினம்  கூறினார்.இதே போல், நேற்று மதியம்  துணை மேயர் தேர்தல் நடைபெற்றது. துணை மேயர் வேட்பாளராக திமுகவை சேர்ந்த  செல்வராஜ் அறிவிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, மதியம் 2.30 மணிக்கு  செல்வராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். அரை மணி நேரம் அவகாசம் வழங்கியும்,  வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் துணை மேயராக செல்வராஜ்  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் அறிவித்தார். இதையடுத்து ஈரோடு மாநகராட்சியில்  மேயர், துணை மேயர் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Related Stories: