×

சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ கோவில்களில் குவியும் பக்தர்கள்

சிவகங்கை, மார்ச் 1:  சிவகங்கை மாவட்டத்தில் இன்று சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ கோவில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மிகப்பழமையான பாரம்பரியம் கொண்ட மாவட்டமான சிவகங்கையில் நகரத்தார்களின் சார்பில் ஏராளமான கோவில்கள் உள்ளன. மேலும் நாட்டார், கிராமத்தினர் சார்பிலும் பெரிய மற்றும் சிறிய கோவில்கள் ஆயிரக்கணக்கானவை உள்ளன. இதில் குல தெய்வமாக வழிபடக்கூடிய பிரசித்திபெற்ற கோவில்கள் ஏராளமானவை ஆகும். வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு மக்கள் குடி பெயர்ந்துவிட்டனர். வேறு இடங்களில் வசித்தாலும் சிவராத்திரி அன்றும் மறுநாளும் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது.

சிவராத்திரி அன்று சைவம் மட்டுமே கோவில்களில் சமைத்து சாப்பிடுவர். அன்றிலிருந்து மூன்றாவது நாள் களரியன்று பாரிவேட்டை நடத்தி அசைவம் சாப்பிடுவதோடு வழிபாடு நிறைவு பெறும். சிலர் சிவராத்திரி அன்றும், சிலர் மூன்று நாட்களும் கோவிலில் தங்கி இருப்பார்கள். இன்று மகா சிவராத்திரி என்பதால் நேற்று முதல் குல தெய்வ கோவில்கள் நோக்கி லட்சக்கணக்கானோர் சென்ற வண்ணம் உள்ளனர். இன்று வழிபாடு நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை செய்து வருகின்றனர். இதனால் மற்ற நாட்களில் ஆள் நடமாட்டமே இல்லாமல் காட்டுப்பகுதிக்குள் இருக்கும் கோவில்கள் கூட நேற்று முதல் களைகட்ட தொடங்கிவிட்டது. அனைத்து குலதெய்வ கோவில்களுக்கும் கார்கள், வேன்கள், டூவீலர்கள் என கூட்டம் கூட்டமாக பக்தர்கள் சென்றனர். இதில் அம்மன் மற்றும் கருப்பணசாமி, அய்யனார், முனியாண்டி கோவில்களே ஏராளமானவர்களுக்கு குல தெய்வமாக உள்ளன.

சிவகங்கையில் காமாட்சி அம்மன், திரவுபதி அம்மன், சக்கரக்கோட்டை முனியாண்டி, நாலுகோட்டை முத்தடிகருப்பு, ஏனாதி அங்காளபரமேஸ்வரி, பெரியகோட்டை குருநாதன், அங்காளபரமேஸ்வரி கோவில், வயிரவன்பட்டி பைரவர்கோவில், பனையடிகருப்பு, நாட்டரசன்கோட்டை கருப்பணசாமி, குருநாதன், அங்காளபரமேஸ்வரி கோவில்களில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். காளையார்கோவில் வாள்மேல் நடந்த அம்மன், மறவமங்கலம் அரியநாச்சியம்மன், சிரமம் கொங்கேஸ்வரர் கோவில், திருப்புவனம் கத்தரிக்காய் சித்தர், மாரநாடு கருப்பணசாமி, இளையான்குடி அருகே வாணி கருப்பணசாமி, சாலைக்கிராமம் பைரவர் கோவில், திருவள்ளுர் சங்கையா கோவில் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களில் லட்சக்கணக்கானோர் வழிபாட்டிற்காக குவிந்துள்ளனர்.

Tags : Kuladeyva ,
× RELATED விழுப்புரம் அருகே குலதெய்வ கோயிலுக்கு வந்த மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலி