×

30 ஆண்டுகளுக்கு பிறகு உடன்குடி பேரூராட்சியை கைப்பற்றியது திமு

உடன்குடி, பிப். 25: முப்பது ஆண்டுகளுக்கு பிறகு உடன்குடி பேரூராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. உடன்குடி ேபரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. கடந்த 19ம் தேதி நடந்த பேரூராட்சி வார்டு தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம்தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த காலங்களில் அதிமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்களே பேரூராட்சி தலைவர் பதவியில் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 22ம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக 13 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு உடன்குடி பேரூராட்சியை திமுக தனிமெஜாரிட்டியுடன் கைப்பற்றியுள்ளது.

கிராமப்புற உள்ளாட்சி தேர்தலின் போதும் 30 ஆண்டுகளுக்கு பிறகு உடன்குடி யூனியன் சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது. அதேபோல் உடன்குடி பேரூராட்சி பதவியை  பிடிக்க தீவிர களப்பணியாற்ற வேண்டுமென திமுகவினருக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து உடன்குடி யூனியன் சேர்மனும், ஒன்றிய செயலாளருமான பாலசிங் தலைமையில் உடன்குடி பேரூராட்சி வார்டு வாரியாக தனித்தனியாக திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேர்தல் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகளை வீடு, வீடாக எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்தனர். இதன் பலனாக பேரூராட்சியில் அதிக வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Thimu ,Udankudi ,
× RELATED தேரியூர் கோயிலில் பூக்குழி திருவிழா