×

திருவாரூர்-காரைக்குடி ரயில் மார்க்கத்தில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் சரக்கு ரயில் சேவை துவக்கம்

திருவாரூர், பிப்.24: திருவாரூர்-காரைக்குடி ரயில் மார்க்கத்தில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் சரக்கு ரயில் சேவை துவங்கியது. திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2009ம் ஆண்டில் ரயில் சேவையானது நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதைக்கான பணிகள் துவங்கின. இருப்பினும் ஆமை வேகத்தை விட மிகவும் குறைவாக நத்தை வேகத்தில் நடைபெற்று வந்த இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்களும், சேவை சங்கத்தினரும், அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனையடுத்து இந்த பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஜுன் மாதம் 1ம் தேதி முதல் டெமு ரயில் சேவையாக 3 மாத காலத்திற்கு தொடங்கப்பட்டது. பின்னர் 3 மாத முடிவின்போது தினகரன் செய்தி எதிரொலி காரணமாக இந்த ரயில் சேவை என்பது நீட்டிக்கப்பட்டு தற்போது வரையில் இயங்கி வருகிறது. மேலும் திருவாரூரிலிருந்து 152 கி.மீ தூரம் கொண்ட காரைக்குடியினை கடப்பதற்கு கேட் கீப்பர்கள் இல்லாமல் மொபைல் கேட் கீப்பர்கள் கொண்டு இயக்கப்பட்டதால் பயண நேரம் என்பது 6 மணி நேரம் வரையில் ஆனதால் இந்த ரயில் சேவை என்பது பொதுமக்களிடையே வரவேற்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில் இதனை காரணம் காட்டி ரூ ஆயிரம் கோடி மதிப்பில் ஏற்படுத்தப்பட்ட இந்த வழித்தடத்திற்கு மூடுவிழா காணும் முயற்சியும் நடைபெற்ற நிலையில் அதுகுறித்து தினகரன் செய்தி மற்றும் நாகை எம்.பி செல்வராஜ், ரயில் உபயோகிப்பாளர் சங்கம் உட்பட பலரது முயற்சி காரணமாக இந்த வழித்தடம் தொடர்ந்து இயங்கி வருகிறது.
இந்நிலையில் நிரந்தர கேட் கீப்பர்களை நியமனம் செய்து ரயிலின் பயண நேரத்தை குறைப்பதுடன் கூடுதல் ரயில் சேவையும் இயக்கிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்த வழித்தடத்தினை உள்ளடக்கிய எம்.பிக்களான நாகை செல்வராஜ், தஞ்சை பழனிமாணிக்கம், சிவகங்கை கார்த்திக்சிதம்பரம், ராமநாதபுரம் நவாஸ்கனி மற்றும் திருச்சி திருநாவுக்கரசர் ஆகியோர் முயற்சியின் காரணமாகவும் முன்னாள் ராணுவத்தினரை கொண்டு கேட் கீப்பர் நியமனம் தற்போது பயண நேரம் என்பது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழித்தடத்தில் சரக்கு ரயில் சேவை என்பதும் தற்போது 13 ஆண்டுகளுக்கு பின்னர் துவங்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி மற்றும் சிவகங்கை, அருப்புக்கோட்டை வழியாக விருதுநகர் மாவட்டத்திற்கு முதன் முதலாக 21 வேகன்களில் அரிசி மூட்டைகள் கொண்டு செல்லும் பணி துவங்கியது. இதனையொட்டி இந்த சரக்கு ரயில் சேவையினை திருச்சிகோட்ட மேலாளர் அகர்வால், முதுநிலை மேலாளர் ஹரிக்குமார் உத்தரவின் பேரில் திருவாரூர் ரயில் நிலைய மேலாளர் ராஜேஷ்குமார்மீனா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ரயில் உபயோகிப்பாளர் சங்க மாவட்ட செயலாளர் பேராசிரியர் பாஸ்கரன் மற்றும் ரயில் நிலைய அலுவலர்கள் பெத்துராஜ், சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Thiruvarur-Karaikudi ,
× RELATED திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில்...