×

திருப்புத்தூர் அருகே வாகனம் மோதி மஞ்சுவிரட்டு காளை பலி மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருப்புத்தூர், பிப். 18: திருப்புத்தூர் அருகே கும்மங்குடியில் சாலையை கடக்க முயன்ற மஞ்சுவிரட்டு காளை, வாகனம் மோதியதில் பரிதாபமாக இறந்தது. டிரைவரை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்புத்தூர் அருகே கும்மங்குடி பகுதியில் அரளிப்பாறை மஞ்சுவிரட்டுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் வீடு திரும்பிய காளை சாலையை கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக வந்த வாகனம் காளை மீது மோதியது. இதில் படுகாயமடைந்த காளை சம்பவ இடத்திலே பலியானது. இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு நிற்காமல் சென்ற வாகனத்தை சிறைபிடித்து வாகனத்தின் ஓட்டுநர் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும் எனக்கூறி சம்பவ இடத்தில் சுமார் 2 மணிநேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருப்புத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் சம்மந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் திருக்கோஷ்டியூர் தெப்ப திருவிழாவிற்கு சென்று திரும்பிய வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் வாகன போக்குவரத்தை மாற்றி அமைத்து சரிசெய்தனர்.

Tags : Tiruputhur ,
× RELATED திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு