×

50 மாதிரி வாக்குகளை பதிவு செய்து சரிபார்ப்பது கட்டாயம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு உத்தரவு வாக்குப்பதிவு நாளன்று காலை 6 முதல் 7 மணி வரை

வேலூர், பிப்.15:வாக்குப்பதிவு நாளன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையில் 50 மாதிரி வாக்குகளை கட்டாயம் பதிவு செய்து சரிபார்க்க வேண்டும் என்று வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் 1,374 கவுன்சிலர்கள், 138 நகராட்சிகளில் 3,843 கவுன்சிலர்கள், 490 பேரூராட்சிகளில் 7,621 கவுன்சிலர்கள் பதவிகளுக்கும் என்று மொத்தம் 640 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 12,838 கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி, அந்தந்த மாவட்டங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

மேலும் வாக்குச்சாவடி மையங்களில் தேவைப்படும் பொருட்களும் வாங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அரசியில் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்ய 17ம் தேதி கடைசி நாள் என்பதால், வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பும் தீவிரமாக உள்ளது. அதேசமயம் வாக்குப்பதிவு நாளன்று என்னென்ன செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதில் மிக முக்கியமாக வாக்குப்பதிவு நாளன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையில் அனைத்து வாக்குச்சவாடி மையங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் 50 மாதிரி வாக்குப்பதிவுகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மாதிரி வாக்குப்பதிவுகளை பூத் ஏஜென்டுகள் முன்னிலையில் மேற்கொள்ள வேண்டும். மாதிரி வாக்குப்பதிவுகளை காலை 7 மணிக்குள் முடிந்தவுடன், அதனை டெலிட் செய்துவிட்டு, பின்னர் வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிக்கலாம் என்று வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED (வேலூர்) கிராம நிர்வாக உதவியாளருக்கு...