×

பி.எம். கிசான் ஊக்கத்தொகை பெற ஆதார் எண் கட்டாயம்

ஈரோடு, பிப். 10: பிரதமரின்  கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெற்று வரும் விவசாயிகள்  ஆதார் எண் இணைக்காவிட்டால் ஊக்கத்தொகை வழங்கப்படமாட்டாது என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரியின்  கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள  விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு  ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில் ஊக்கத்தொகையாக  வழங்கப்பட்டு வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 94  ஆயிரத்து 414 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ்  இதுவரை 10 தவணை தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது விவசாயிகள் வருகின்ற  ஏப்ரல் 2022 முதல் ஜுலை 2022 வரையுள்ள காலத்திற்கான 11வது தவணைத்தொகையைப்  பெறுவதற்கு தங்கள் ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதி செய்தல் அவசியமாகும்.ஆதார்  எண்ணுடன் செல்பேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் (www.pmkisan.gov.in) என்ற  பி.எம்.கிசான் வலைதளத்தில் தங்களின் ஆதார் எண் விவரத்தினை உள்ளீடு  செய்தால் ஓடிபி எண், செல்பேசிக்கு அனுப்பப்படும். அந்த ஓடிபி எண்ணை உள்ளீடு  செய்தால் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் விபரம் உடனடியாக கணினி  திரையில் தெரியும்.

 இதுவரை ஆதார் எண்ணுடன் செல்பேசி எண்ணை இணைக்காத  விவசாயிகள், அருகில் உள்ள பொது சேவை மையங்களின் மூலம் பி.எம்.கிசான் திட்ட  வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து தங்களின் விரல்  ரேகையினை பதிவு செய்து விவரங்களை சரிபார்த்து உறுதி படுத்திக் கொள்ளலாம்.  இந்த மாதம் 28ம் தேதிக்குள் பயனாளிகள், தங்களின் ஆதார் விவரத்தினை  பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே,  இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கான 11வது தவணைத்தொகை  கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kisan ,
× RELATED விவசாயிகளின் எந்த எதிர்பார்ப்பையும்...